புதுடெல்லி,
தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக கோரி டெல்லியில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று பேரணி நடத்தினர்.
வாக்காளர் பட்டியலைச் சீரமைக்க தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடவடிக்கைகளின்போது பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக 'இந்தியா' கூட்டணி கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. வாக்காளர் சேர்க்கைக்கான 'படிவம் 6'-இல் தன்னிச்சையாக மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும், லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும் கூறுகின்றன.
இதுதொடர்பாக கடந்த செப்டம்பர் 30-ம் தேதி நடைபெற்ற இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து போராட்டங்கள் மற்றும் பேரணி நடத்துவது என்றும், இந்த விவகாரத்தில் நாட்டின் குடியரசுத் தலைவரைச் சந்தித்து முறையிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் ஜனநாயகம் காப்போம் என்ற தலைப்பில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, இன்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகம் நோக்கி பேரணி நடைபெற்றது. கோரிக்கை அடங்கிய பதாகைகளுடன் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அணிவகுத்துச் சென்றனர். பேரணியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, அகிலேஷ் யாதவ் மற்றும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பலர் பங்கேற்றனர். எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என முழக்கம் எழுப்பியபடி, தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகம் நோக்கி சென்றனர்.
தேர்தல் ஆணையம் செல்லும் வழியில், நாடாளுமன்ற சாலையில் நிதி ஆயோக் அலுவலகம் அருகே எம்.பி.க்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு தடுப்புகள் வைக்கப்பட்டிருந்ததால் அதன் மீது ராகுல், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த இடத்தில் களேபரம் ஏற்பட்டது. அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பலர் கைது செய்யப்பட்டு போலீஸ் வேன்களில் அழைத்துச் செல்லப்பட்டனர். அதன்பின்னர் போலீசாரின் தடையை மீறி, ஆகாஷ்வாணி பவனுக்குள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் ஆதரவாளர்கள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வானொலி அலுவலகத்துக்குள் போராட்டம் நடத்தும் அவர்கள், அங்கிருந்து தேர்தல் ஆணையத்திற்குச் செல்ல அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த போராட்டத்தால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இப்போராட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:-
நாங்கள் முன்னெடுத்துச் செல்லும் போராட்டமும், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ள விஷயமும் நாட்டின் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் ஏழை மக்களின் உரிமைகளுடன் தொடர்புடையவை.
போராட்டங்கள், சிறைவாசம் மற்றும் தூக்குமேடையை எதிர்கொண்டு நம் மக்கள் வென்றெடுத்த சுதந்திரம், இப்போது திட்டமிட்டுப் பறிக்கப்பட்டு வருகிறது. அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள, அவர்கள் (பாஜக) சாத்தியமான அனைத்து வழிகளிலும் மக்களின் உரிமைகளைப் பறித்து வருகின்றனர். மக்களைத் தவறாக வழிநடத்தி அவர்கள் அதிகாரத்திற்கு வர முயன்றனர்.
அவர்கள் முறையற்ற விதத்தில் பதவியேற்றது மற்றும் அதிகாரத்தைக் கைப்பற்றியதைக் கருத்தில் கொண்டு நான் இதைச் சொல்கிறேன். அவர்கள் உடனடியாக பதவியிலிருந்து விலக வேண்டும்; இல்லையெனில் நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும். நாட்டு மக்கள் இனியும் மௌனமாக இருக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.