தேசிய செய்திகள்

ஜனாதிபதிக்கு அவமதிப்பு:மேற்கு வங்காள அரசு அறிக்கை அளிக்க மத்திய உள்துறை உத்தரவு

மேற்கு வங்காளத்தில் திரவுபதி முர்மு, தன்னை வரவேற்க முதல்-மந்திரியோ அல்லது மாநில மந்திரிகளோ வராதது குறித்து அதிருப்தி தெரிவித்தார்.

புதுடெல்லி,

2026ஆம் ஆண்டு 9ஆவது சர்வதேச சந்தால் மாநாடு மார்ச் 7, 2026 அன்று மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங்கில் நடைபெற்றது. பழங்குடி ஒற்றுமை, கலாசார பாரம்பரியம் மற்றும் சமூகப் பொருளாதார அதிகாரமளிப்பில் கவனம் செலுத்துவதற்காக சர்வதேச சந்தால் கவுன்சிலால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டார்.

இதில் உரையாற்றிய திரவுபதி முர்மு, தன்னை வரவேற்க முதல்-மந்திரியோ அல்லது மாநில மந்திரிகளோ வராதது குறித்தும் அதிருப்தி தெரிவித்தார். இதுகுறித்து அவர், மாநாடு வெகுதொலைவில் நடைபெற்றதால் இங்குள்ள மக்கள் அதை அடைய முடியாமல் போனது மிகவும் வருத்தமாக உள்ளது. இடத்தை மாற்றியதற்கான காரணங்கள் ஏற்புடையவை அல்ல.

பொதுவாக, ஜனாதிபதி வரும்போது, ​​முதல்-மந்திரி மற்ற மந்திரிகளும் உடனிருப்பார்கள். ஆனால், முதல்-மந்திரி வரவில்லை. நானும் வங்காளத்தின் மகள்தான். எனக்கு வங்காளத்திற்குச் செல்ல அனுமதி இல்லை. மம்தா என் தங்கையைப் போன்றவர். ஒருவேளை, அவர் என்மீது கோபமாக இருக்கலாம், அதனால்தான் இந்த நிகழ்ச்சி இங்கு நடைபெறுகிறது. ஆனால் பரவாயில்லை என வருத்தம் தெரிவித்தார்.

சர்வதேச சந்தால் மாநாடு ஆரம்பத்தில் பிதான் நகரில் நடைபெறவிருந்தது. ஆனால், பின்னர் நெரிசல் காரணமாக பாக்டோக்ரா விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கோஷய்பூரில் உள்ள ஒரு சிறிய இடத்திற்கு மாற்றப்பட்டதாக மாநில அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், இந்த விவகாரம் மேற்கு வங்க அரசியலில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் ஜனாதிபதி முர்முவை மேற்கு வங்காள அரசும், திரிணாமுல் காங்கிரசும் அவமதித்து விட்டதாக பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார்.

இந்தநிலையில், ஜனாதிபதிக்கு ஏற்பட்ட அவமதிப்பு குறித்து மேற்கு வங்காள தலைமை செயலாளர் நந்தினி சக்கரவர்த்தியிடம் மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த மோகன் அறிக்கை கேட்டு உள்ளார். அதில்,

* ஜனாதிபதியை வரவேற்க முதல்-மந்திரி, மந்திரிகள், தலைமைச்செயலாளர், டிஜிபி ஏன் செல்லவில்லை.

* ஜனாதிபதிக்காக அமைக்கப்பட்ட கழிவறையில் ஏன் தண்ணீர் வரவில்லை.

* ஜனாதிபதி செல்வதற்காக மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்த பகுதியில் குப்பை அதிகம் நிரம்பி இருந்தது. அதனை சரி செய்யாமல் இருந்தது ஏன்?

* டார்ஜிலிங் மாவட்ட கலெக்டர், சிலிகுரி போலீஸ் கமிஷனர், கூடுதல் மாவட்ட கலெக்டர் அனைவரும் இதற்கு பொறுப்பானவர்கள். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.