தேசிய செய்திகள்

மக்களவையில் பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்: என்னென்ன அம்சங்கள் உள்ளன?

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நீட் உள்ளிட்ட தேர்வுகளில் முறைகேடுகளை தடுப்பதற்காக மக்களவையில் பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே மசோதாவை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிமுகம் செய்தார். வினாத்தாள் கசிவு, தேர்வு தொடர்பான மோசடிக்ளில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்க சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளது. முறைகேட்டின் தீவிரத்தை பொறுத்து 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் திருத்தம் செய்யப்படும். திட்டமிட்டு குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டு சிறை; ரூ.10 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.

எதிர்க்கட்சிகள் அமளி

மேல் முறையீடு வழக்குகள் மூன்று மாதத்திற்குள் முடிக்க வேண்டும்; தவறு செய்யும் நிறுவனங்கள் பொதுத்தேர்வுகளை நடத்த விதிக்கப்படும் தடை காலம் 8 ஆண்டுகளாக உயர்த்தப்படும் உள்ளிட்ட சரத்துகள் மசோதாவில் இடம் பெற்றுள்ளன. மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், மத்திய அரசு பதிலளிக்க வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஈடுபட்டன. அமளிக்கு இடையே இந்த மசோத தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னுரிமை அளிக்க வேண்டும்

முன்னதாக நாடாளுமன்ற விவகாரத்துறை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுக்கும்) திருத்த மசோதா, 2026-க்கு அனைத்து அரசியல் கட்சிகளும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். வினாத்தாள் கசிவு சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனையை உறுதி செய்வதற்கும், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் இந்த மசோதா மிகவும் முக்கியமானது.

அரசின் நோக்கம்

இப்போதைய சூழலில் இதுவே நாடாளுமன்றத்தின் முதன்மை விவாதப் பொருளாக இருக்க வேண்டும். வேறு எந்த விவகாரத்தையும் கொண்டு வந்து கவனத்தை திசைதிருப்பக் கூடாது. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் முற்றிலும் தவறானவை. இந்த மசோதாவை எந்த நிலையிலும் நிறைவேற்றுவதே அரசின் நோக்கம். இந்த சட்டம் அமலுக்கு வந்தால் வினாத்தாள் கசிவில் ஈடுபடுவோருக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும். பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள தேர்வு சீர்திருத்த நடவடிக்கைகளின் முக்கிய அங்கமாக இந்த மசோதா இருக்கிறது” என்றார்.