புதுச்சேரி
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முதல்-மந்திரி ரங்கசாமி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், ஜூன் 15-ந்தேதி புதுச்சேரி யூனியன் பிரதேச அரசுக்கான பதவிக்காலம் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து, கடந்த மார்ச் 15-ந்தேதி இந்திய தேர்தல் ஆணையம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான தேர்தல் தேதியை அறிவித்தது.
இதன்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு ஏப்ரல் 9-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தப்படும். இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு, கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, பிரசாரம் உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த சூழலில், புதுச்சேரியில் சட்டசபை தேர்தலையொட்டி 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, 8, 9, 10 ஆகிய 3 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் இன்று மாலையுடன் பிரசாரமும் ஓய்வடைந்தது.