புதுச்சேரி,
புதுச்சேரியில் வருகிற ஏப்ரல் மாதம் 9-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 16-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கலுக்கு வரும் 23-ந்தேதி கடைசிநாள் ஆகும் எனினும் கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு இறுதியாகவில்லை.
கடந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகள், தி.மு.க. 13 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலா ஒரு இடங்கள் பகிர்ந்து கூட்டணியாக போட்டியிட்டன. இதில் காங்கிரஸ் கட்சி 2 இடங்களில் மட்டும் வென்றது. தி.மு.க. 6 இடங்களில் வென்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. இதனால் புதுச்சேரி அரசியலில் தி.மு.க.வின் பலம் அதிகரித்தது. என்.ஆர்.காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது.
இந்த நிலையில் வரும் தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் இடையே நடை பெற்ற பங்கீடு பேச்சுவார்த்தையில், புதுச்சேரி மாநில தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி., தி.மு.க.வுக்கு 14 இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். ஆனால் காங்கிரஸ் மேலிட பார்வையாளரான கிரிஷ் சோடங்கர், 'காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் போட்டியிட விரும்புகிறது. எனவே நீங்கள் 12 இடங்கள் பெற்றுக் கொள்ளுங்கள். அதில் 2 இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி கொடுத்துவிடுங்கள்' என்று கூறியதாக தெரிகிறது.
சமீபத்தில் நடைபெற்ற 2-ம் கட்ட பேச்சுவார்த்தையின் போது, 'உங்களுக்கு (காங்கிரஸ்) 14 இடங்கள், எங்களுக்கு (தி.மு.க.) 14 இடங்கள் பிரித்துக் கொள்வோம். மீதமுள்ள 2 தொகுதிகளை கூட்டணி கட்சிக்கு ஒதுக்குவோம்' என்று தி.மு.க. தரப்பில் எடுத்துரைக்கப்பட்டு உள்ளது. தி.மு.க.வின் நிலைப்பாடு குறித்து காங்கிரஸ் குழுவினர் டெல்லி மேலிடத்துக்கு அறிக்கையாக சமர்ப்பித்து உள்ளனர்.
தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலை இருந்து வரும் வேளையில், புதுச்சேரியில் உள்ள சட்டசபை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்த தி.மு.க. நிர்வாகிகளிடம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 17-ந்தேதி நேர்காணல் நடத்தினார்.
இதைத்தொடர்ந்து, தி.மு.க. சார்பில் உப்பளம், முதலியார்பேட்டை, தட்டாஞ்சாவடி ஆகிய தொகுதிகளுக்கு நிர்வாகிகள் வேட்புமனுவைத்தாக்கல் செய்துள்ளனர். அதே போன்று, காங்கிரஸ் சார்பில் மணவெளி தொகுதிக்கு வேட்புமனு அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உறவு நீடிக்குமா? என்ற கேள்வியும் புதுச்சேரி அரசியலில் எழுந்துள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரி திருபுவனை (தனி) தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ.வான அங்காளன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே 4 முறை எம்.எல்.ஏ.வாகவும், ஒரு முறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இதே போன்று முன்னாள் அமைச்சர் கண்ணன் மகன் விக்னேசும் தி.மு.க.வில் இணைந்துள்ளார். இவர்கள் 2 பேரும் இணைந்துள்ளது தி.மு.க.வுக்கு வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு 15, தி.மு.க.வுக்கு 13 என தொகுதிப் பங்கீடு உறுதியானதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இன்று இறுதி கட்ட பேச்சுவார்த்தை தொடர்ந்து சென்னையில் முதல்-அமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது. நீண்ட இழுபறிக்குப் பிறகு தி.மு.க.வைவிட காங்கிரஸ் 2 தொகுதிகள் அதிகமாக போட்டியிட முடிவு செய்துள்ளது.