தேசிய செய்திகள்

புதுச்சேரி: நர்சை வெட்டி கொன்ற ரவுடியின் உடல் ரெயில் தண்டவாளத்தில் மீட்பு

புதுச்சேரி வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த நர்ஸ் ஒருவரை, அப்பகுதியைச் சேர்ந்த ஒரு ரவுடி வெட்டி படுகொலை செய்தார்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் நர்சை வெட்டி கொன்ற ரவுடியின் உடல் காட்பாடி அருகே ரெயில் தண்டவாளத்தில் மீட்கப்பட்டுள்ளதோடு, செல்போன், பைக் கொடுத்து உதவிய ரவுடியின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரவுடியை காதலித்த நர்ஸ்

புதுச்சேரி வில்லியனூர் கோபாலன் கடை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த தனுஷ்கோடி என்பவர் தனியார் கேஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஜெயஸ்ரீ (வயது 22), தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி கலைக்குமார் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

சிறைக்கு சென்ற ரவுடி

இதற்கிடையே கொலை, கொலை முயற்சி, அடிதடி, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கலைக்குமார் ஈடுபட்டு சிறைக்கு சென்று வந்ததால், அவருடன் பேசுவதை ஜெயஸ்ரீ நிறுத்தி விட்டார். இதனிடையே, குற்ற சம்பவம் ஒன்றில் கைது செய்யப்பட்டு, கலைக்குமார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் இருந்து வெளியில் வந்த பிறகு ஜெயஸ்ரீயை, கலைக்குமார் சந்திக்க முயன்றுள்ளார். ஜெயஸ்ரீ அவரை சந்திப்பதையும், பேசுவதையும் தவிர்த்து வந்துள்ளார்.

நர்ஸ் வெட்டி படுகொலை

இதனால் கலைக்குமார், ஜெயஸ்ரீயின் நடவடிக்கைகளை கண்காணித்துள்ளார். அப்போது, ஜெயஸ்ரீ வேறொரு நபருடன் பழகி வந்தததை அறிந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கலைக்குமார், தன்னிடம் பேசாமல் உள்ள ஜெயஸ்ரீயை தனது இரண்டு நண்பர்கள் உதவியுடன், கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெட்டி படுகொலை செய்தார்.

நண்பர்கள் கைது

இந்த சம்பவம் குறித்து வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் கலைக்குமாரின் நண்பன் லோகேஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். கலைக்குமார், கார்த்திக் ஆகியோரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். கலைக்குமார் திருப்பதி அருகே பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படையில் அங்கு விரைந்து சென்று அவரை தேடினர். இதில் அவரது நண்பர் கார்த்திக் என்பவர் மட்டும் போலீசாரிடம் சிக்கினார்.

ஜெயஸ்ரீயுடன், கலைக்குமார் பேசுவதற்காக செல்போனை கார்த்திக் கொடுத்துள்ளார். மேலும் ஜெயஸ்ரீயை சந்திக்க தனது பைக்கையும் கொடுத்து உதவியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

ரவுடியின் உடல் ரெயில் தண்டவாளத்தில் மீட்பு

இதனிடையே காட்பாடி அருகே ரெயில் தண்டவாளத்தில் ரவுடி கலைக்குமார் பலத்த காயங்களுடன் இறந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார். அவர் ரெயிலில் அடிப்பட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாராவது அவரை கொலை செய்திருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது உடலை புதுச்சேரி கொண்டு வர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT