புதுச்சேரி
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முதல்-மந்திரியாக, அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி பதவி வகித்து வருகிறார். 2021-ம் ஆண்டு மே மாதம் முதல், ரங்கசாமி முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார். அவர் பலமுறை முதல்-மந்திரி பதவியை வகித்திருக்கிறார்.
இதன்படி முதலில், 2001 முதல் 2008 ஆண்டு வரையிலும், பின்னர் 2011 முதல் 2016 வரையிலும் அவர் முதல்-மந்திரியாக இருந்திருக்கிறார். 2011-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசில் இருந்து பிரிந்து, தனியாக அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியை அவர் உருவாக்கினார்.
ஜூன் 15-ந்தேதி உடன் அவருடைய ஆட்சியின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு கடந்த ஏப்ரல் 9-ந்தேதி ஒரே கட்டத்தில் சட்டசபை தேர்தல் பலத்த பாதுகாப்புடன், வன்முறை எதுவுமின்றி நடத்தி முடிக்கப்பட்டது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி தொடங்கி நடந்து வருகிறது.
ரங்கசாமி வெற்றி
இதில், புதுச்சேரியில் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் முதல்-மந்திரியான ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதியில் 4,441 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மொத்தமுள்ள 30 தொகுதிகளில் மதியம் 2.30 நிலவரப்படி அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க. (2), காங்கிரஸ் (1), தி.மு.க. (1), அ.தி.மு.க. (1), சுயேச்சை ஒருவர் என அடுத்தடுத்து வெற்றியை பெற்றுள்ளனர்.
20 தொகுதிகள்
இதுதவிர, லட்சிய ஜனநாயக கட்சி, நேயம் மக்கள் கழகம், த.வெ.க. ஆகிய 3 கட்சிகளும் தலா 1 இடத்தில் முன்னிலையில் உள்ளன. சுயேச்சைகள் இருவர் முன்னிலையில் உள்ளனர். மொத்தம் 20 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதில், முதல்-மந்திரி ரங்கசாமி 10,024 வாக்குகள் பெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நேயம் மக்கள் கழகம் வேட்பாளர் விநாயகம் 5,583 வாக்குகள் பெற்று 2-ம் இடத்தில் உள்ளார்.
சுயேச்சை சேது (சேதுசெல்வம்) 3,984 வாக்குகள் பெற்று 6,040 வாக்குகள் பின்தங்கி உள்ளார். இந்திய தேசிய காங்கிரசை சேர்ந்த பழம்பெரும் தலைவரான வைத்திலிங்கம் 2,990 வாக்குகள் பெற்றுள்ளார். அவர் 7,034 வாக்குகள் பின்தங்கி உள்ளார்.