புதுச்சேரி,
30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கு 9ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையேயான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி புதுச்சேரி முதல்-மந்திரியாக செயல்பட்டு வருகிறார்.
இதனிடையே, தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரசுக்கு 16 தொகுதிகளும் பாஜகவுக்கு 14 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. இதில் யாருக்கு எந்த தொகுதி என்று இதுவரை முடிவாகவில்லை. அதேவேளை, தேசிய ஜனநாயக கூட்டணியில் லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் தலைமையிலான லட்சிய ஜனநாயக கட்சியை இணைக்க பாஜக முயற்சித்து வருகிறது. கூட்டணியில் லட்சிய ஜனநாயக கட்சிக்கு 2 தொகுதிகளை கொடுக்கவும் பாஜக முன்வந்தது.
ஆனால், கூட்டணியில் லட்சிய ஜனநாயக கட்சியை சேர்க்க என்.ஆர்.காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. என்.ஆர்.காங்கிரசின் எதிர்ப்பை பாஜக கண்டுகொள்ளாமல் லட்சிய ஜனநாயக கட்சியை கூட்டணியில் சேர்க்க ஆர்வம்காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பிரச்சினையை தொடர்ந்து பாஜகவுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், புதுச்சேரி முதல்-மந்திரியுமான ரங்கசாமி புறக்கணித்தார். இதனால் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணியில் குழப்பம் நீடித்து வரும் நிலையில் முதல்-மந்திரி ரங்கசாமி இன்று சேலத்தில் உள்ள அப்பா பைத்தியசாமி கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். அப்பா பைத்தியசாமி கோவிலுக்கு செல்லும் ரங்கசாமி அங்கு சாமி தரிசனம் செய்கிறார். மேலும் கோவிலில் இன்று இரவு நடைபெறும் சிறப்பு பூஜையிலும் ரங்கசாமி பங்கேற்க உள்ளார்.
கூட்டணியில் குழப்பம் நீடித்து வரும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலக ரங்கசாமி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் தனித்து போட்டியிட 30 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், வேட்பாளர் பட்டியலை அப்பா பைத்தியசாமி கோவிலில் வைத்து பூஜை செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.