புதுச்சேரி,
ஆங்கிலேயர்களின் ஆதிகத்தில் இருந்து இந்தியா 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி விடுதலை பெற்ற நிலையில், சுமார் 180 ஆண்டுகளில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரியும் விடுதலை பெற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரியை விட்டு பிரெஞ்சுகாரர்கள் வெளியேற வேண்டும் என அப்பொழுது இருந்த பஞ்சாயத்து உறுப்பினர்களின் கருத்து கேட்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பின்படி 1954-ம் ஆண்டு நவம்பரில் புதுச்சேரிக்கு பிரெஞ்சு அரசாங்கம் விடுதலை கொடுத்தது.
1954-ம் ஆண்டு பிரெஞ்சு அரசு புதுச்சேரிக்கு விடுதலை அளித்தாலும் இந்திய அரசு நிர்வாகத்துடன் புதுச்சேரி இணையாமல் இருந்தது. அதன்பின் 1962-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி பிரெஞ்சு அரசாங்கமும், நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கமும் ‘டி ஜூர்’(de Jure) என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
அதுவரை பிரெஞ்சுகாரர்களிடம் இருந்த புதுச்சேரி, காரைக்கால், மாகே, யானம் ஆகிய நான்கு பகுதிகளிலும் இந்தியாவின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதிகளாக ஏற்கப்பட்டன. இதன்படி புதுச்சேரி இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக்கொண்டு, இந்திய அரசின் முறையான கட்டுப்பாட்டின்கீழ் வந்தது.
எனவே ஆகஸ்ட் 16-ந்தேதியை சட்டப்பூர்வ பரிமாற்று நாளாக புதுச்சேரி அரசு இன்றுவரை கொண்டாடி வருகிறது. அதன்படி இன்று புதுச்சேரி கீழூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுச்சேரி உள்துறை மந்திரி நமச்சிவாயம் இந்திய தேசியக்கொடியை ஏற்றினார். தொடர்ந்து விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மந்திரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.