புதுச்சேரி,
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியில் கடந்த 2024 மார்ச் மாதம் 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கால்வாயில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த கருணாஸ் (19) என்ற வாலிபரையும் விவேகானந்தன் (57) என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், இருவரும் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து கால்வாயில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, விவேகானந்தன் சிறையில் உள்ள கழிப்பறையில் தனது துண்டால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணை பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான மற்றொரு நபரான கருணாஸ், குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு அளித்தார். இவருக்கான தண்டனை விவரங்கள் வருகிற 5-ந்தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார். குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டது குறிப்பிடத்தக்கது.