தேசிய செய்திகள்

புதுச்சேரி: பா.ஜ.க. பேச்சுவார்த்தை குழுவை சந்திக்காமல் சென்ற ரங்கசாமி

மன்சுக் மாண்டவியாவை சந்திக்காமல் ரங்கசாமி திருச்செந்தூர் சென்றுள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் அடுத்த மாதம் 9-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலிலும் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி தொடரும் என இரு கட்சி தலைவர்களும் கூறி வந்த நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்கள், பா.ஜ.க. கூட்டணிக்கு 14 இடங்கள் என முடிவானது. இதனை முதல்-அமைச்சர் ரங்கசாமியும் உறுதி செய்தார். இதற்கிடையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போது புதுச்சேரியில் புதிதாக தொடங்கப்பட்ட லட்சிய ஜனநாயக கட்சியை கூட்டணியில் இணைக்க கூடாது, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று என்.ஆர்.காங்கிரஸ் வலியுறுத்தியதாகவும், இதனை பா.ஜ.க. ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக் கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், மன்சுக் மாண்டவியா தலைமையில் பா.ஜ.க. பேச்சுவார்த்தை குழு புதுச்சேரி சென்றுள்ளது. தனியார் ஓட்டலில் மன்சுக் மாண்டவியாவை என்.ஆர்.காங்கிரஸ் குழுவை சேர்ந்த அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், ஜெயபால் ஆகியோர் சந்தித்து பேசினர்.

இன்று மாலை 6 மணிக்கு முதல்-மந்திரி ரங்கசாமியை சந்திக்க மன்சுக் மாண்டவியா திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மன்சுக் மாண்டவியாவை சந்திக்காமல் ரங்கசாமி திருச்செந்தூர் சென்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நேற்று நடைபெற்ற என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், நிர்வாகிகள் சிலர் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகி த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.