தேசிய செய்திகள்

புதுச்சேரி: முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ரங்கசாமி

புதுச்சேரி முதல்-அமைச்சர் பதவியை ரங்கசாமி இன்று ராஜினாமா செய்தார்.

புதுச்சேரி,

புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த 2 தொகுதிகளில் ஒரு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதன் பின்னர் அந்த தொகுதி எம்.எல்.ஏ.வை தேர்வு செய்ய இடைத்தேர்தல் நடைபெறுவது வழக்கம்.

முதல்-அமைச்சர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளார். அவர் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் தனது ராஜினாமா கடிதத்தை அளிக்க இருக்கிறார். இதையடுத்து அந்த தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்கப்படும். 6 மாதங்களில் இடைத்தேர்தல் நடக்கும்.

முதல்-அமைச்சர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியபோது, வாக்காளர்கள் மத்தியில் பேசுகையில், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று நான் தான் மீண்டும் முதல்-அமைச்சராக வருவேன். தட்டாஞ்சாவடி தொகுதியில் அசோக் ஆனந்த் போட்டியிடுவார் என்று தெரிவித்திருந்தார்.

எனவே தட்டாஞ்சாவடி தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் போட்டியிடுவார் என தெரிகிறது.

இந்நிலையில் புதுச்சேரி கவர்னர் கைலாசநாதனை சந்தித்து முதல்-அமைச்சர் பதவியை ரங்கசாமி இன்று (07.05.2026) ராஜினாமா செய்தார். இதனிடையே சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சி புதுச்சேரி தலைவர் பதவியை வைத்திலிங்கம் ராஜினாமா செய்தார். தட்டாஞ்சாவடி தொகுதியில் ரங்கசாமியை எதிர்த்து போட்டியிட்ட அவர் டெபாசிட் இழந்திருந்தார்.