தேசிய செய்திகள்

புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் மாநில இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு சதவீதம் எவ்வளவு..?

புதுச்சேரியில் 80.81 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. இது கடந்த தேர்தலை விட 6.29 சதவீதம் குறைவாகும்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் 2 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 79 சதவீத வாக்குகள் பதிவாகின. அசாமில் ஒரு மக்களவை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் 76 சதவீத வாக்குகள் பதிவாகின.

மேற்கு வங்காளம்: இடைத்தேர்தல்

மேற்கு வங்காள மாநிலம் புர்பா மெதினிபூர் மாவட்டம் நந்திகிராம் சட்ட சபை தொகுதியிலும், முர்ஷிதாபாத் மாவட்டம் ரெஜிநகர் தொகுதியிலும் நேற்று இடைத்தேர்தல் நடந்தது. முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி வெற்றி பெற்ற 2 தொகுதிகளில், ராஜினாமா செய்த தொகுதி நந்திகிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

அங்கு அவரது முன்னாள் உதவியாளர் சந்திரநாத் ரத்தின் தாயார் ஹாசி ராணிரத், பா.ஜனதா வேட்பாளராக போட்டியிடுகிறார். மம்தா பானர்ஜி அணியின் வேட்பாளர், போட்டியில் இருந்து விலகியதால், காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதானுக்கு மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்தார்.

78.42 சதவீத வாக்குப்பதிவு

நந்திகிராம் தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் விறுவிறுப்பாக வாக்களித்தனர்.

மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தது. நந்திகிராம் தொகுதியில் 79.39 சதவீத வாக்குகள் பதிவாகின. ஒருசில சம்பவங்களைத் தவிர, வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்ததாக ஒரு தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

கட்சி தலைவர் கைது

ஆம் ஜனதா உன்னாயன் கட்சி தலைவர் ஹுமாயுன் கபீர் ராஜினாமா செய்ததால், ரெஜிநகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. அங்கு வாக்குப்பதிவு நடந்தபோது, தேர்தல் அதிகாரிகளுடன் ஏற்பட்ட வாக்குவா தத்தால், ஹுமாயுன் கபீர் கைது செய்யப்பட்டார்.

அத்தொகுதியில் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தது. 78.42 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தல் கமிஷனின் புகார்கள் கண்காணிப்பு அமைப்பில் 37 புகார்கள் பெறப்பட்டன.

அசாம் - இடைத்தேர்தல்

அசாம் மாநிலம் நகோன் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரத்யுத் போர்டோலாய் வெற்றி பெற்றிருந்தார். நடப்பாண்டின் தொடக்கத்தில், அந்த பதவியை அவர் ராஜினாமா செய்து விட்டு பா.ஜனதாவில் இணைந்தார். சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதனால், காலியாக உள்ள நகோன் மக்களவை தொகுதியில் நேற்று இடைத்தேர்தல் நடந்தது. பா.ஜனதா வேட்பாளராக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவாஷிஸ் சர்மா, காங்கிரஸ் வேட்பாளராக சிபமோனி போரா, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் பத்ருத்தின் அஜ்மல் ஆகியோர் உள்பட 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 19 லட்சத்து 5 ஆயிரம்.

76 சதவீத வாக்குப்பதிவு

8 சட்டசபை தொகுதிகளில் உள்ள 2 ஆயிரத்து 312 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது. சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. மற்றபடி, வாக்குப்பதிவு அமைதியாக நடந்ததாக ஒரு அதிகாரி தெரிவித்தார்.

மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தது. மொத்தம் 76 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

புதுச்சேரி - தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்

புதுவையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தட்டாஞ்சாவடி, மங்கலம் ஆகிய 2 தொகுதிகளில் முதல்-அமைச்சர் ரங்கசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலுக்கு பின் தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார். எனவே அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 9-ந்தேதி தொடங்கியது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் (அசோக் ஆனந்த்) உள்பட 11 பேர் போட்டியிட்டனர்.

இந்த தொகுதியில் மொத்தம் 26,921 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 12,575, பெண்கள் 14,341, மூன்றாம் பாலினத்தவர் 5 பேர் ஆவர் இவர்களில் 350 மாற்றுத்திறனாளிகள், 3 வெளிநாடு வாழ் வாக்காளர்களும் அடங்குவர். இவர்களுக்காக 31 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்தலில் தலா 31 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வி.வி.பாட் எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம் பயன்படுத்தப்பட்டது.

80.81 சதவீத வாக்குப்பதிவு

நேற்று காலை பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குப்பதிவு பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கப்பட்டது. வாக்காளர்கள் நேற்று காலை 6.30 மணி முதலே வாக்குப்பதிவு மையங்களில் குவிந்தனர்.

வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை அமைதியாக விறுவிறுப்புடன் நடந்தது. வாக்குப்பதிவு குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தோராயமாக 80.81 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த தேர்தலை விட 6.29 சதவீதம் குறைவாகும்.

SCROLL FOR NEXT