தேசிய செய்திகள்

புனே கார் விபத்து வழக்கில் குற்றவாளிக்கு ஜாமீன்: சட்டத்தின் மீது யாருக்கும் பயம் இல்லை - உயிரிழந்த பெண்ணின் தந்தை கண்ணீர் பேட்டி

விடுதலையான குற்றவாளியை அவரது குடும்பத்தினர் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாக வரவேற்று கொண்டாடி மகிழ்ந்தனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் புனே கல்யாணி நகரில் கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம், 17 வயது சிறுவன் அதிவேகமாக ஓட்டிச் சென்ற சொகுசு கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற ஐ.டி. ஊழியர்கள் 2 பேர் உயிரிழந்தனர். இதில், விபத்தை ஏற்படுத்திய சிறுவனை 300 வார்த்தையில் கட்டுரை எழுதுமாறு கூறி சிறார் கோர்ட்டு அவரை ஜாமீனில் விடுதலை செய்தது.

இந்த விவகாரம் பொதுமக்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து சிறுவனின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. இந்த விபத்து நடந்த சமயத்தில், காரை ஓட்டிய சிறுவன் மது அருந்தியதாக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. ஆனால், கடைசி நேரத்தில் சிறுவனனின் ரத்த மாதிரி மாற்றப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சிறுவனின் ரத்த மாதிரிகளை மாற்ற டாக்டர்களுக்கு ரூ. 3 லட்சம் லஞ்சமாகக் கொடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் தொடர்புடைய 2 டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். அதோடு, சிறுவனுக்கு பதிலாக, தங்கள் வீட்டு டிரைவரை மிரட்டி அவர் தான் கார் ஓட்டியதாக போலீசில் வாக்குமூலம் அளிக்க வைத்ததாக சிறுவனின் தாத்தாவையும் போலீசார் கைது செய்து இருந்தனர்.

இவ்வாறாக இந்த வழக்கில் இருந்து சிறுவனை தப்ப வைக்க நடந்த முயற்சிகள் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்துவதாக இருந்தது. இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம், இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஆதாரங்களை அழிக்க முயன்றது தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேருக்கு ஜாமீன் வழங்கியது.

அதனை தொடர்ந்து, இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிக்கும் சுப்ரீம் கோர்ட்டு தற்போது ஜாமீன் வழங்கியுள்ளது. சம்பவம் நடந்தபோது அவர் 17 வயது சிறுவனாக இருந்தார். இந்நிலையில், தற்போது அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். விடுதலையான குற்றவாளியை அவரது குடும்பத்தினர் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாக வரவேற்று கொண்டாடி மகிழ்ந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழ்ந்த பெண்ணின் தந்தை சுரேஷ் கோஷ்டா கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

“இரண்டு பேரை கொன்றுவிட்டு கொண்டாடுவது அவர்களின் வழக்கமாக இருக்கக் கூடும். அவர்கள் சாமானிய குடிமக்களை ஏளனம் செய்கிறார்கள். சட்டம் சாமானிய மனிதனை சிறைப்படுத்துகிறது. ஆனால் அதே சட்டம் தண்டனையில் இருந்து தப்பிக்க சிலருக்கு வழிவகை செய்கிறது.

ஒருவன் சிறுவனாக இருந்தால், அவன் எதையும் செய்யலாம் என்ற நிலை உள்ளது. மக்களிடையே சட்டத்தின் மீதான அச்சத்தை விதைக்கும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு ஒரு தீர்ப்பை வழங்க வேண்டும். இப்போது சட்டத்தின் மீது யாருக்கும் பயமே இல்லை.

ஐகோர்ட்டு ஒருவருக்குத் தண்டனை வழங்கினால், சுப்ரீம் கோர்ட்டு அவரை விடுவிக்கிறது. இது குற்றத்தை ஊக்குவிக்கிறது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள ‘இரத்தத்திற்கு இரத்தம்’ என்பது போன்ற சட்டங்கள் இந்தியாவில் கொண்டுவரப்படும் வரை, எதுவும் மாறப்போவதில்லை.

சட்டம் கடுமையாக இல்லாவிட்டால், குற்றங்களை எப்படி கட்டுப்படுத்த முடியும்? இந்த வழக்கில் குற்றவாளியின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு, அவனை காப்பாற்ற முயன்ற பெற்றோரும் சிறையில் அடைக்கப்பட வேண்டும். அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படக் கூடாது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.