ஸ்ரீநகர்,
இன்று நாடு முழுவதும் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவையொட்டி தேசம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. பயங்கரவாத பாதிப்பு அதிகம் காணப்படும் காஷ்மீரில் செல்போன் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டது. காஷ்மீரில் பெண் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலை நடத்தலாம் என உளவுத்துறை உள்ளீடுகள் ஸ்திரமான தகவல்களை கொண்டு உள்ளது என எச்சரிக்கை வெளியாகியது. இதனையடுத்து மாநிலத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிஉயர் உஷார் நிலைப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் தெற்கு காஷ்மீரில் புனேவை சேர்ந்த இளம்பெண் ஒருவரை போலீஸ் கைது செய்து உள்ளது என பிடிஐ செய்தி வெளியிட்டு உள்ளது. அவர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தற்கொலை பயங்கரவாதியாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் போலீஸ் அதிகாரி முனிர் கான் செய்தியாளர்களிடம் பேசுகையில், சந்தேகத்திற்கு இடமான பெண் தொடர்பாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இவ்விவகாரம் தொடர்பாக கிடைத்த தகவல்கள் அனைத்தையும் விசாரித்து முன்நகர்ந்து சென்றோம், இறுதியில் சந்தேகத்திற்கு இடமான பெண்ணை பிடித்தோம்,என கூறிஉள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக முழு விபரங்களை தெரிவிக்க மறுத்துவிட்ட ஜம்மு காஷ்மீர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் முனிர் கான், நாங்கள் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் விசாரித்து வருகிறோம், இதுதொடர்பாக பிற விசாரணை முகமைகளிடமும் ஆலோசனையை பெறுவோம். இதில் உண்மையை முழுமையாக அறிந்துக்கொள்ள முழு தகவல்களையும் முறையாக ஆய்வு செய்வோம். முழுமையான விசாரணை முடிந்த பின்னரே எங்களால் ஒரு முடிவுக்கு வரமுடியும்,என குறிப்பிட்டு உள்ளார்.
புனேவை சேர்ந்த சாதியா அன்வர் ஷாயிக் என்ற பெண் ஏற்கனவே காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்றுவிட்டார் எனவும் அவர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார் எனவும் மத்திய உளவுப்பிரிவு எச்சரிக்கையை விடுத்து இருந்தது எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட இளம்பெண் ஷாயிக்கை கடந்த 2015-ம் ஆண்டு புனே பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் விசாரித்தது, ஐ.எஸ். ஆதரவாளர்களுடன் அவர் தொடர்பில் இருப்பது தெரியவந்ததும் விசாரணை நடத்தப்பட்டது. இளம்பெண் சிரியா செல்வதற்கு திட்டமிட்டு இருந்தார் எனவும் விசாரணை முகமைகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.