சண்டிகார்
பஞ்சாப்பில் போதைப்பொருளுக்கு எதிராக போராடிய தன்னார்வலர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
பஞ்சாப்பில் சட்டவிரோத வகையில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிராக கடுமையாக போராடி வந்தவர் தன்னார்வலர் பர்வீந்தர் சிங் என்ற ஜோட்டா.
இந்நிலையில், மான்சா மாவட்டத்தில் ஒரு மருந்து கடையில் போதைப்பொருட்கள் விற்பனை தொடர்பான தகவல் அறிந்து சிலரை அழைத்துக்கொண்டு, ஜோட்டா அந்த கடைக்கு சென்றார். அந்த கடையின் உரிமையாளரிடம் அதுபற்றி கேள்வி கேட்டுள்ளார். இதனை வீடியோவாகவும் அவர் பதிவு செய்துள்ளார்.
அப்போது, கடை உரிமையாளர் தன்னுடைய கைத்துப்பாக்கியை எடுத்து, ஜோட்டாவை நோக்கி சுட்டுள்ளார். துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்து சரிந்த ஜோட்டாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். எனினும், அதில் பலனின்றி அவர் பலியாகி விட்டார். பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில், முக்கிய குற்றவாளியான கடை உரிமையாளர் அஸ்வினி குமார் உடனே தப்பி ஓடி விட்டார். போலீசார் அவரை தேடி வந்தனர். இதில், ராஜஸ்தானின் சலசார் பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் போலீசார் கூட்டாக இணைந்து இந்நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கடை உரிமையாளர் தப்பியோடுவதற்கு உதவிய அவருடைய கூட்டாளியை போலீசார் நேற்று கைது செய்தனர். சம்பவத்தன்று, முதியவர் ஒருவருக்கு போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்தே, அதனை தட்டி கேட்பதற்காக ஜோட்டா சென்றுள்ளார்.
இதுதொடர்பான வீடியோவை படம் பிடித்ததுடன், அதனை முகநூலில் நேரலையாகவும் ஒளிபரப்பி உள்ளார். ஏறக்குறைய 5 நிமிடங்கள் வரை வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஆத்திரத்தில் ஜோட்டாவை கடை உரிமையாளர் சுட்டு படுகொலை செய்துள்ளார்.