சண்டிகார்
பஞ்சாப்பில் உள்ள அரசு துறை சார்ந்த கட்டிடங்களை உள்ளடக்கிய பகுதிகளில் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக இன்று இ-மெயிலில் கடிதங்கள் வந்துள்ளன. இதனை சண்டிகார் நகர போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர்.
இதேபோன்று சண்டிகார் மாவட்ட கோர்ட்டுக்கும் மற்றும் செசன்ஸ் கோர்ட்டுக்கும் கூட இ-மெயிலில் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடப்பட்டு உள்ளது. அதில், தற்கொலை வெடிகுண்டு நபர் ஒருவர் தாக்குதல் நடத்த கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கோர்ட்டு வளாகங்கள் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. அனைத்து நுழைவு வாசல்களும் அடைக்கப்பட்டன.
உள்ளே வருபவர்கள், வெளியே செல்பவர்கள் என ஒவ்வொருவரும் தனித்தனியாக முழு அளவில் சோதனை செய்யப்பட்டனர். இதுபற்றி மர்ம நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.