தேசிய செய்திகள்

அலுவலகத்தில் காதலியை கத்தியால் 20 முறை குத்திக்கொன்ற இளைஞர் - அதிர்ச்சி சம்பவம்

தன்னைத்தானே கத்தியால் கழுத்தில் குத்தி தற்கொலைக்கும் முயன்றுள்ளார்.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பாட்யாலா நகரை சேர்ந்த ஹரிந்தர்சிங் பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் டிம்பிள் (வயது 28) என்ற இளம்பெண்ணும் வேலை செய்து வந்தார்.

இதனிடையே, ஹரிந்தர் சிங்கும் டிம்பிளும் காதலித்து வந்தனர். ஆனால், கடந்த சில மாதங்களுக்குமுன் ஹரிந்தர் சிங்கிற்கும் டிம்பிளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஹரிந்தர் சிங் உடனான காதலை டிம்பிள் முறித்துக்கொண்டார். இதன்பின்னர், தன்னை மீண்டும் காதலிக்குமாறு டிம்பிளை ஹரிந்தர் சிங் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். அதற்கு டிம்பிள் மறுத்துள்ளார்.

குத்திக்கொலை

இந்நிலையில், மொஹாலியில் உள்ள அலுவலகத்தில் டிம்பிள் நேற்று இரவு 7.30 மணியளவில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது அலுவலகத்திற்கு வந்த ஹரிந்தர் சிங் தான் மறைத்து கொண்டு வந்த கத்தியால் காதலில் டிம்பிளை சரமாரியாக குத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த டிம்பிள் அலுவலகத்தில் இருந்து வெளியே செல்ல முயற்சித்தார். ஆனால் அவரை விடாமல் துரத்தி சென்று டிம்பிளின் கழுத்தில் கத்தியால் சரமாரியாக குத்தினார். இந்த தாக்குதலை சக ஊழியர்கள் தடுக்க முயன்றனர். ஆனால், அவர்களை கத்தியை காட்டி மிரட்டிய ஹரிந்தர் சிங் தொடர்ந்து டிம்பிளை குத்தினார். பின்னர், தன்னைத்தானே கத்தியால் கழுத்தில் குத்தி தற்கொலைக்கும் முயன்றுள்ளார். இதில், ஹரிந்தர் சிங் படுகாயமடைந்தார்.

இதையடுத்து, இருவரையும் மீட்ட அலுவலக ஊழியர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் டிம்பிளை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்தவிட்டதாக அறிவித்தனர். மேலும், படுகாயமடைந்த ஹரிந்தர் சிங் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.