தேசிய செய்திகள்

பஞ்சாப்: காவல் நிலையம் மீது எறிகுண்டு வீச்சு; பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு தொடர்பு - 6 பேர் கைது

பாகிஸ்தானை சேர்ந்த நபரின் தூண்டுதலின் பேரில், அவர் டிஜிட்டல் தொடர்பின் வழியே அளித்த உத்தரவின் அடிப்படையில் தாக்குதல் நடந்துள்ளது.

அமிர்தசரஸ்

பஞ்சாப்பின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள பிந்தி சைடா காவல் நிலையத்தின் மீது எறிகுண்டு வீச்சு தாக்குதல் நடந்துள்ளது. இதுபற்றி பஞ்சாப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு உள்ள தொடர்பு மற்றும் வெளிநாட்டு நபர் ஒருவருக்கு உள்ள தொடர்பு பற்றி தெரிய வந்தது.

இதுபற்றி டி.ஜி.பி. கவுரவ் யாதவ் கூறும்போது, முதல்-மந்திரி பகவந்த் மான் சிங் உத்தரவின்படி, மாநிலத்தில் இருந்து பயங்கரவாதிகளை வெளியேற்றும் வகையில், அமிர்தசரஸ் போலீசார், பரீத்கோட் போலீசார் உள்ளிட்டோரின் ஒருங்கிணைந்த முயற்சியால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சம்பவத்தன்று, வயல்வெளியின் வழியே நடந்து வந்த அந்த கும்பல் காவல் நிலையத்தின் பின்புறம் வந்து, 2 கையெறி குண்டுகளை வீசி விட்டு சென்றது. இதில் 2 பேர் ஈடுபட்டனர். இந்த தாக்குதலை மற்றொருவர் பதிவு செய்து கொண்டார். ஏனெனில், அதனை அவர்களுடைய கும்பல் தலைவரிடம் தெரிவிக்க வேண்டும்.

இதன் பின்னர், கோதுமை பயிர்களின் இடையில் பல மணிநேரம் ஒளிந்திருந்த அவர்கள், அருகேயுள்ள சாக்கடையில் ஆடைகளை வீசி விட்டு தடயம் எதுவும் இல்லாமல் அழித்து விட்டு, இருளில் தப்பியோடி விட்டனர் என்று கூறினார்.

பாகிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவரின் தூண்டுதலின் பேரில், அவர் டிஜிட்டல் தொடர்பின் வழியே அளித்த உத்தரவின் அடிப்படையில், இந்த தாக்குதலில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர் என்று டி.ஜி.பி. கூறினார்.

இது தொடர்பாக, 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 2 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.