சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள மஜிதா சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஹம்ஜா கிராமத்திற்கு அருகே பணியில் இருந்த பஞ்சாப் போலீஸ் உதவி ஆய்வாளர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நடந்தபோது, ஜோகா சிங் தனது ஸ்கூட்டரில் பணிக்குச் சென்று கொண்டிருந்தார், மேலும் அப்போது அவர் போலீஸ் சீருடையில் இருந்தார். அவர் கணிகே பங்கர் கிராமத்தைச் சேர்ந்தவர். காயங்களுடன் ஜோகா சிங்கின் உடல் ஃபதேகர் சுரியன்-மஜிதா சாலைக்கு அருகே கண்டெடுக்கப்பட்டது.
அமிர்தசரஸ் மூத்த போலீஸ் சூப்பிரண்டு சுஹைல் மிர் காசிம் கூறுகையில்:- ‘ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏஎஸ்ஐ ஜோகா சிங்கின் உடலை பற்றிய தகவல் கிடைத்தது என்றார். தகவல் கிடைத்த உடனே மஜிதா காவல் நிலையத்தின் எச்.ஓ தலைமையிலான போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. தடயவியல் குழுவும் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்’ என்று தெரிவித்தார்.
பின்னர் அவரது உடல் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டறிய போலீஸார் அப்பகுதியின் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.