தேசிய செய்திகள்

பஞ்சாப்: எறிகுண்டு தாக்குதலில் வெடித்த ஸ்கூட்டர்; பாகிஸ்தான் பின்னணியா? என விசாரணை

2024-ம் ஆண்டு முதல் 20-க்கும் மேற்பட்ட எறிகுண்டு தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

ஜலந்தர்

பஞ்சாப்பின் ஜலந்தர் நகரில் எல்லை பாதுகாப்பு படையின் சதுக்கம் பகுதி அருகே ஸ்கூட்டர் ஒன்று திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் உடனடியாக சென்று தீயை அணைத்தனர்.

பரபரப்பாக இயங்க கூடிய அந்த பகுதியில் ஏற்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். இதில், எறிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என தெரிய வந்துள்ளது.

இதில், பாகிஸ்தானை சேர்ந்த பாபர் கல்சா அமைப்பு உள்ளிட்ட குழுவினர் பின்னணியில் உள்ளனரா? என விசாரணை நடந்து வருகிறது. தவிர, தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு இதனுடன் ஏதேனும் தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

பஞ்சாப்பில் ஜலந்தர் உள்ளிட்ட பெரிய நகரங்கள், எல்லைப்புற மாவட்டங்களில் 2024-ம் ஆண்டு முதல் 20-க்கும் மேற்பட்ட எறிகுண்டு தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இதில், போலீஸ் அமைப்புகள் அரசியல் அலுவலகங்கள் மற்றும் சில பாதுகாப்பு அமைப்புகளை இலக்காக கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன.

இதில் சில கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. என்.ஐ.ஏ. உள்ளிட்ட மத்திய அமைப்புகள் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், பாகிஸ்தான் மற்றும் ஐரோப்பியாவின் சில பகுதிகளில் உள்ள நபர்களுக்கு உள்ள தொடர்பு தெரிய வந்துள்ளது.