சண்டிகர்,
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சிக்கு 10 எம்.பி.க்கள் இருந்தனர். மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் துணைத்தலைவராக ராகவ் சத்தா எம்.பி. செயல்பட்டு வந்தார்.
இதனிடையே, ராகவ் சத்தா கடந்த சில மாதங்களாக பாஜகவுடன் இணைந்து செயல்படுவதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர். இதையடுத்து, மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் துணைத்தலைவர் பதவியில் இருந்து ராகவ் சத்தா நீக்கப்பட்டார்.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. ராகவ் சத்தா கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவருடன் மேலும் 6 எம்.பி.க்களும் பா.ஜ.க.வில் இணைந்தனர்.
இந்த நிலையில் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசை கவிழ்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் ராகவ் சத்தா. பஞ்சாப் சட்டசபையில் 92 எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ள ஆம் ஆத்மி கட்சியில் இருந்து 60க்கும் மேற்ப்பட்ட உறுப்பினர்களை தன் வசம் இழுக்க தீவிர முயற்சி காட்டி வருகிறார் ராகவ் சத்தா. மேலும் சட்டப்படி மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர் ஒரு கட்சியில் இருந்து பிரிந்தால் அவர்கள்மீது கட்சி தாவல் தடை சட்டம் பாயாது என்பது ராகவ் சத்தா அந்த யுக்தியை பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.
ஏற்கனவே 7 மாநிலங்களவை உறுப்பினர்களை திரட்டி தனது அரசியல் பலத்தை நிரூபித்தவர் அதே பாணியில் பஞ்சாப் மாநில ஆட்சியை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ராகவ் சத்தாவின் செயல்பாடுகள் பஞ்சாப் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.