தேசிய செய்திகள்

“ஒட்டுமொத்த இந்தியாவும் சுப்ரீம்கோர்ட்டை நோக்கி நாளை பேரணி..” - ராகுல் காந்தி அறிவிப்பு

இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் எங்களுடன் இணைந்து வருவார்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மாநில எல்லைகளை கடந்து, இந்தியர்களாக ஒன்றிணைந்து நாங்கள் சுப்ரீம்கோர்ட்டை நோக்கிப் பேரணி செல்வோம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இரண்டு பேரணிகளை நடத்திய நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (9ஆம் தேதி) ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து மனு அளித்தனர். இதேபோல், நேற்று முதல் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மற்றும் மாணவர்கள் அமைப்பினர் தொடர்ந்து டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நாளை சுப்ரீம்கோர்ட்டை நோக்கி பேரணியாக சென்று தலைமை நீதிபதியை சந்தித்து மனு அளிக்க இருப்பதாக காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

நேற்று, அமைதியான முறையில் போராடுவதற்காக டெல்லியில் நாட்டின் இளைஞர்கள் திரண்டனர். அவர்கள் வெறுப்பையோ, கோபத்தையோ அல்ல, மாறாக அன்பையே தங்கள் இதயங்களில் சுமந்து வந்தனர். ஆனால், அவர்கள் காவல்துறையினராலும் பா.ஜ.க. குண்டர்களாலும் தாக்கப்பட்டனர். இது நாம் விரும்பும் இந்தியா அல்ல.

கட்சி, பாலினம், சாதி, சமூகம் மற்றும் மாநில எல்லைகளை கடந்து, இந்தியர்களாக ஒன்றிணைந்து நாங்கள் சுப்ரீம்கோர்ட்டை நோக்கி நாளை பேரணி செல்வோம்.

இளைஞர்கள், அனைத்து எதிர்க்கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஜனநாயகத்தின் மீதும் இந்திய அரசியலமைப்பின் மீதும் நம்பிக்கை கொண்ட அனைவரும் எங்களுடன் இணைந்து வருவார்கள்.

வாக்கு திருட்டை முடிவுக்குக் கொண்டுவருதல், SIR-ஐ நிறுத்துதல் மற்றும் ஞானேஷ் குமார் பதவி விலகுதல் ஆகியவற்றை வலியுறுத்தி, நாட்டின் சார்பாகத் தலைமை நீதிபதியிடம் நாங்கள் ஒரு மனுவைச் சமர்ப்பிப்போம்.

நரேந்திர மோடி, அமித் ஷா, அஜித் தோவல் மற்றும் மோகன் பகவத் ஆகியோரால் இந்தியாவின் குரலை ஒடுக்க முடியாது. இந்த கோழைகளால் எங்களை அச்சுறுத்த முடியாது. அவர்கள் விலகிச் செல்ல வேண்டியிருக்கும்.

அன்பு, சகோதரத்துவம் மற்றும் தேசபக்தியுடன் நாங்கள் ஒன்றிணைந்து பேரணி செல்வோம்.

அஞ்சாதீர்கள். நாளை, இந்தியா முழுவதுமே சுப்ரீம்கோர்டை நோக்கி பேரணி செல்லும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT