பாஜக மூத்த தலைவரும், மத்திய வர்த்தக மந்திரியுமான பியூஸ் கோயல் தனது 'எக்ஸ்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
காங்கிரஸ் சிறுபான்மை துறையின் ஆலோசனை கவுன்சில் கூட்டம் 23-ந் தேதி நடந்துள்ளது. அதில் பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, 'மோடி அரசு ஓராண்டுக்குள் கவிழும்" என்று கூறியுள்ளார்.இது சாதாரண கருத்து அல்ல. நாட்டில் அராஜகத்தை பரப்பும் மாபெரும் சதி என்று தோன்றுகிறது. காங்கிரஸ், பல்வேறு எதிர்க்கட்சிகள், இந்தியாவை சீர்குலைக்கும் கனவைக் கொண்ட வெளிநாட்டு கும்பல் ஆகியவை சம்பந்தப்பட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சியால் தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியாது என்றும், மோடி அரசை அகற்ற முடியாது என்றும் புரிந்து விட்டதால், நாடு முழுவதும் வன்முறையை தூண்ட ராகுல்காந்தியும், அவரது கூட்டாளிகளும் முயன்று வருகிறார்கள். நாட்டில் எந்த சாதகமான அம்சமும் நடப்பதை காண சகிக்காத அளவுக்கு இந்தியா மீதான அவர்களின் வெறுப்பு ஆழமாக இருக்கிறது.
ராகுல்காந்தி, எதிர்க்கட்சிகள் ஆகியோரின் உண்மையான இயல்பை மக்கள் முற்றிலும் புரிந்து கொண்டு விட்டனர்.அதனால் அவர்கள் அக்கட்சிகளுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளனர். இந்தியாவை பற்றி எரிய வைக்கும் 'இந் தியா' கூட்டணியின் சதி வெற்றி பெறாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.