தேசிய செய்திகள்

‘மக்களை தூண்டிவிடவும், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தவும் முதல் ஆளாக வருபவர் ராகுல் காந்தி’ - கங்கனா ரனாவத் விமர்சனம்

பயங்கரவாத சக்திகளால் தேசத்தின் பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலில் இருந்து எதிர்காலத்தில் தீர்வு கிடைக்கும் என்றும் நம்புவதாக கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மக்களை தூண்டிவிடவும், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தவும் முதல் ஆளாக வருபவர் ராகுல் காந்தி என பா.ஜ.க. எம்.பி. கங்கனா ரனாவத் விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் இன்று நீட் முறைகேடு விவகாரம், மாணவர் போராட்டங்கள் மீதான போலீஸ் நடவடிக்கை, ராமர் கோவில் நன்கொடை விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து மக்களவையை மதியம் 2 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.

இந்த நிலையில், பா.ஜ.க. எம்.பி. கங்கனா ரனாவத், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் மோடியின் வீடியோவை நீக்கியது தொடர்பாக பேஸ்புக் நிறுவனர் மார்க் மன்னிப்பு கோரியது குறித்து பேசிய கங்கனா, “பிழைகள் ஒப்புக்கொள்ளப்பட்டது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பயங்கரவாத சக்திகளால் நமது தேசத்தின் பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலில் இருந்து எதிர்காலத்தில் தீர்வு கிடைக்கும் என்றும் நம்புகிறோம்” என்றார்.

இதனிடையே, ஜார்க்கண்ட் மாநில அரசு பணி தேர்வுகளில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, அந்த மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கங்கனா ரனாவத், “நமது இளைய தலைமுறையினரும், நமது குழந்தைகளும் பல தசாப்தங்களாக, பலவிதமான இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியினர் இங்கே(டெல்லியில்) ஒரு மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தினர். நாடாளுமன்றத்தை தாக்க முயன்றனர். ஆனால், ஜார்க்கண்டில் மாணவர்களின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் இந்த சூழலில் ராகுல் காந்தி அங்கு சென்று அவர்களை சந்திக்கவில்லை. அதே சமயம், மக்களை தூண்டிவிடுவதற்கோ, அல்லது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கோ ராகுல் காந்திதான் முதல் ஆளாக வருகிறார்” என்று தெரிவித்தார்.