திருவனந்தபுரம்,
ராகுல் காந்தி ஒரு கடினமான போராளி என்றும், 2029 மக்களவை பொதுத்தேர்தலில் நரேந்திர மோடிக்கு எதிராக பிரதமர் வேட்பாளராக நின்று எதிர்க்கட்சிகளை வழிநடத்துவதற்கு தகுதி வாய்ந்த ஒரே தலைவர் ராகுல் காந்திதான் என்று கேரள மாநிலத்தின் முதல்-மந்திரி வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது;-
“ராகுல் காந்தி ஒரு போராளி. அவருக்கு ஒரு விஷயத்தில் உறுதியான நம்பிக்கை இருந்தால், அதற்காக எதையும் செய்யத் தயங்க மாட்டார். இப்போது, இந்திய மக்கள் அனைவரும் ராகுல் காந்தியை நம்புகிறார்கள். சிந்தனையாளர்கள், பத்திரிகைகள் மற்றும் கூட்டணிக் கட்சிகள் ராகுல் காந்தியை நம்புகிறார்கள்.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் எதிராக ராகுல் காந்தி முன்னெடுத்து வரும் போராட்டம், நாட்டின் அரசியல் போக்கையே மாற்றிய ஒரு திருப்புமுனையாக இந்திய வரலாற்றில் பதியப்படும்.
2029 மக்களவை பொதுத்தேர்தலில் நரேந்திர மோடிக்கு எதிராக பிரதமர் வேட்பாளராக நின்று எதிர்க்கட்சிகளை வழிநடத்துவதற்கு தகுதி வாய்ந்த ஒரே தலைவர் ராகுல் காந்திதான். ‘இந்தியா’ கூட்டணி கட்சியினர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக நிச்சயமாக ஏற்றுக்கொள்வார்கள்.
அனைத்து கூட்டணிக் கட்சிகளும் அவருக்குப் பின்னால் அணி திரளும். ஏனென்றால் இந்த அரசாங்கத்தை மாற்றக்கூடிய ஒரே தலைவர் அவர்தான். சந்தேகத்திற்கு இடமின்றி, ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளுக்கு வேறு வழியே இல்லை. இதுதான் ஒரே வழி."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.