புதுடெல்லி,
நாடு முழுவதும் அநீதிக்கு எதிராக போராடும் மக்களின் குரல்களை ஒன்றிணைக்கும் வகையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ‘சத்தியாகிரகா’ என்ற புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளார். காந்தி ஜெயந்தியை ஒட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த இணையதளத்தை அவர் அறிமுகப்படுத்தினார்.
நாடு முழுவதும் விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் நடத்தும் பல்வேறு போராட்டங்களை ஒரே டிஜிட்டல் வரைபடத்தில் ஒருங்கிணைப்பதே இதன் முதன்மை நோக்கமாகும். பல்வேறு பகுதிகளில் தங்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு எதிராக போராடுபவர்கள், இந்த இணையதளத்தில் தங்களது விவரங்களையும் போராட்ட காரணங்களையும் பதிவு செய்யலாம்.
அவ்வாறு பதிவு செய்யப்படும் மக்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை நாடாளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் கொண்டு சென்று அவர்களுக்காக வலுவாகக் குரல் கொடுக்க போவதாக ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களின் குரல்கள் நசுக்கப்படுவதை தடுத்து, அவர்களுக்கு உரிய நீதி கிடைக்க எதிர்க்கட்சியாக தார்மீக ஆதரவை வழங்குவதற்காகவே இந்த 'சத்தியாகிரகம்' தளம் தொடங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.