தேசிய செய்திகள்

பிரதமர் மோடியை கேலி செய்து பேசிய ராகுல் காந்தி: பாஜக கடும் தாக்கு

பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு கொள்கையை கேலி செய்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாடு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று அக்கட்சி எம்பி ராகுல் காந்தி பேசினார். அப்போது, பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்தார். மோடியையும் அவரது வெளிநாட்டு கொள்கையையும் விமர்சித்து பேசிக்கொண்டு இருந்த ராகுல் காந்தி, மோடியின் வெளிநாட்டு கொள்கை என்பது வெளிநாட்டு தலைவர்களை கட்டிப்பிடிப்பதை மட்டுமே அடிப்படையாக கொண்டது போல் இருப்பதாக சாடினர். இதனை விளக்கும் வகையில், மேடையில் இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் தீட்சித்தை ராகுல் காந்தி கட்டிப்பிடித்தும் காட்டினார்.மேலும், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரை இந்தியாவை புரிந்துகொள்ளாத “கோமாளிகள்” என்று ராகுல் காந்தி விமர்சித்தார்.

முதிர்ச்சியான தலைமை தேவை

ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு மத்திய கல்வி மந்திரி பிரகலாத் ஜோஷி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், “ராகுல் காந்தி எப்போது முதிர்ச்சி அடைய போகிறீர்கள்? இந்தியாவை வழிநடத்துவதற்கு முதிர்ச்சியான தலைமை தேவை. இதுபோன்ற நாடகங்கள் தேவையில்லை. மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ‘கோமாளிகள்’ என்று அழைப்பது அவரது முதிர்ச்சியின்மையை காட்டுகிறது” என்று தெரிவித்தார்.

அவமதிக்கிறார்

பிரதமர் மோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்றும், குடும்ப வாரிசு அரசியல் மூலம் அவர் அந்த பதவிக்கு வரவில்லை என்றார்.மேலும், பிரதமரை அவமதிப்பதன் மூலம் நாட்டின் மக்களையே ராகுல் காந்தி அவமதிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.