தேசிய செய்திகள்

காதலி பற்றி முதல் முறையாக மனம் திறந்த ராகுல் காந்தி

காதலில் விழ வேண்டும் என்றால் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக உணவகத்துக்கு செல்லுங்கள் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவரான சோனியா காந்தி 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆப் லவ்' என்ற சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகம் கடந்த 10-ந்தேதி விற்பனைக்கு வந்தது. 526 பக்கங்களை கொண்ட சோனியாகாந்தி புத்தகத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது.

காதலியை நினைவுகூர்ந்த ராகுல்

இந்த நிகழ்ச்சியில் பேசிய நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தனது காதலி குறித்த தகவல்களை முதல்முறையாக பகிர்ந்தார்.

இது குறித்து ராகுல்காந்தி பேசியதாவது:-

எனது பெற்றோரை பற்றி பல கதைகள் புழக்கத்தில் இருந்தன. அவற்றில் முக்கியமான ஒன்று கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உள்ள உணவகத்தில் அவர்கள் சந்தித்ததாகும். பல ஆண்டுகளுக்கு பிறகு எனது காதலியுடன் அதே உணவகத்துக்கு சென்றேன்.

அங்கிருந்த ஊழியரிடம் இந்த உணவகத்தில் தான் எனது பெற்றோர் சந்தித்தார்கள் என்று கூறினேன். உடனே அந்த ஊழியர் என்னை பார்த்து அவர்களா? எனக்கு அவர்களை தெரியும்' என்றார். அவர்களை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்று நான் கேட்டேன். அதற்கு அவர் 'ஓ... அந்த இருவரா? நீங்கள் யாரை பற்றி பேசுகிறீர்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும் என்று பதில் அளித்தனர்.

பின்னர் உணவகத்தில் என்ன சாப்பிடலாம் என்று கேட்ட போது சிக்கன் சாசர் உணவை பரிந்துரைத்தார். காதலில் விழ வேண்டும் என்றால் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக உணவகத்துக்கு செல்லுங்கள். ஆனால் சிக்கன் சாசரை மட்டும் சாப்பிடாதீர்கள்.

இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

தோழியுடன் உணவகத்துக்கு உடன் வந்த பெண் யார் என்று கேட்ட போது, 'அவர் இப்போது என் தோழி' என்று ராகுல்காந்தி சிரித்தபடி பதில் அளித்தார்.

நகைச்சுவையாக இந்த நினைவுகளை பகிர்ந்து கொண்ட ராகுல்காந்தி தனது பெற்றோருக்கு இடையே இருந்த ஆழமான அன்பு மற்றும் பாசம் குறித்தும் பேசினார். ராஜீவ் காந்தி - சோனியாகாந்தி தம்பதியினரின் உறவு தனது குழந்தை பருவத்திலும், குடும்ப வாழ்க்கையிலும் ஏற்படுத்திய தாக்கத்தையும் அவர் நினைவு கூர்ந்தார்.

SCROLL FOR NEXT