புதுடெல்லி,
பட்ஜெட் கூட்டத்தொடரில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின்போது, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ராணுவ தலைமை தளபதி நரவானேவின் வெளியிடப்படாத புத்தகத்தில் இருந்த விசயங்களை எடுத்து காட்டி, அவையில் பேச முற்பட்டார்.
அப்போது, சபாநாயகர் ஓம் பிர்லா அதனை அனுமதிக்க மறுத்து விட்டார். ஆளுங்கட்சி உறுப்பினர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நாடாளுமன்ற விதிகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது கூறி, அதனை பேச ராகுல் காந்திக்கு அனுமதி அளிக்க பிர்லா மறுத்து விட்டார்.
இதேபோன்று, அவையில் அமளியில் ஈடுபட்ட பிற எதிர்க்கட்சி தலைவர்களையும் பிர்லா பேச அனுமதிக்காததுடன், 8 எம்.பி.க்களை சஸ்பெண்டு செய்தும் உத்தரவிட்டார்.
இந்நிலையில், பிர்லாவுக்கு எதிராக அவையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 94சி விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி, மக்களவை சபாநாயகர் பதவியில் இருந்து ஓம் பிர்லாவை நீக்க கோரி நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இதில் மொத்தம் 118 எம்.பி.க்கள் கையெழுத்திட்டனர். நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை ஆய்வு செய்து முறையான நடவடிக்கை எடுக்கும்படி, அதனை அவையின் பொது செயலாளருக்கு ஓம் பிர்லா அனுப்பினார்.
நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசில், ஓம் பிர்லா கடுமையான பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறார் என குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்கும்வரை அவை நடவடிக்கைகளில் பங்கேற்க போவதில்லை என ஓம் பிர்லா முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், ராகுல் காந்திக்கு மக்களவையில் பேச இறுதியாக நாளை அனுமதி தரப்பட்டு உள்ளது. அவர் அவையில் என்ன விசயங்களை பேச உள்ளார் என்பது பற்றிய விவரங்களை காங்கிரஸ் கட்சி வெளியிடவில்லை.