தேசிய செய்திகள்

மார்ச் 25ம் தேதி கேரளாவில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் ராகுல் காந்தி

தேசிய மற்றும் மாநில அளவிலான தலைவர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதன்படி, கேரளா (140 தொகுதிகள்) மற்றும் அசாம் (126 தொகுதிகள்) ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் (30 தொகுதிகள்) வரும் ஏப்ரல் 9-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கேரளாவின் தர்மடம் சட்டமன்ற தொகுதியில் அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி பினராயி விஜயன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தர்மடம் தொகுதியில் அவர் 3-வது முறையாக போட்டியிடுகிறார். கடந்த 19-ம் தேதி காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 92 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கேரளாவில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான தனது தேர்தல் பிரச்சாரத்தை, மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மார்ச் 25ம் தேதியன்று கோழிக்கோட்டில் ஒரு மாபெரும் பேரணியுடன் தொடங்குகிறார்.

ஏப்ரல் 9-ம் தேதி அன்று நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு முன்னதாக, மாநிலத்தில் தனது பிரச்சார பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், இந்த பேரணி மாலையில் கோழிக்கோடு கடற்கரையில் நடைபெற உள்ளது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்தார். அதில் தேர்தலுக்கான முக்கிய வாக்குறுதிகள் குறித்து ராகுல் காந்தி விரிவாக எடுத்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

மேலும் கட்சியின் தேசிய மற்றும் மாநில அளவிலான தலைவர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.