தேசிய செய்திகள்

ராகுல் காந்தி முரட்டுத்தனத்தோடு என்னை இழுக்க பார்த்தார்: மத்திய மந்திரி குற்றச்சாட்டு

சபாநாயகரிடமும் நான் இதனை கூறுவேன் என மத்திய இணை மந்திரி கூறினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, கட்சி எம்.பி.க்களுடன் வாசலில் நின்றபோது, மத்திய இணை மந்திரி ரவ்னீத் சிங் பிட்டு அந்த வழியே சென்றபோது, வணக்கம் சகோதரரே, எனது துரோகி நண்பரே. கவலைப்படாதீர்கள். நீங்கள் மீண்டும் காங்கிரசுக்கு வருவீர்கள் என்று கூறியபடி அவருடன் கைகுலுக்க முயன்றார்.

அதற்கு பிட்டு, நாட்டின் எதிரி என்று கூறியபடி ராகுல் காந்தியுடன் கைகுலுக்க மறுத்து விட்டார். இருவரும் கடுமையான வார்த்தைகளை பரிமாறிக்கொண்ட இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி ரவ்னீத் சிங் பிட்டு பின்னர் கூறும்போது, நாடாளுமன்ற அவைக்கு உள்ளே நான் நுழைய முயன்றேன். அவருக்கு என் மேல் வருத்தம் இருப்பதற்கான சாத்தியம் உள்ளது.

ஆனால் ஒரு பெரிய குடும்பத்தில் இருந்து வந்த தலைவர் அவர். நாடாளுமன்றத்திற்கு உள்ளே வாய் வார்த்தையாக பேசி கொள்ளும்போது, அதனை கைகலப்பாக மாற்ற முயற்சி மேற்கொண்டார். அவர் அந்த சம்பவத்தின்போது, தன்னுடைய உணர்விலேயே இல்லை.

தொடர்பில்லாத விசயங்களை பேசினார். அவைக்கு உள்ளேயும், வெளியேயும் முட்டாள்தனத்துடன் அவர் பேசி கொண்டிருந்தார். சபாநாயகரிடமும் நான் இதனை கூறுவேன் என்றார்.

அவர் கைகுலுக்க முயன்றபோது நான் மறுத்தேன். இதனால், அவர் முரட்டுத்தனத்தோடு என்னை இழுக்க பார்த்தார். வேணுகோபால்ஜி அவரை பிடித்து இழுத்து நிறுத்தினார். சுக்ஜிந்தர் சிங் ரந்தவா கூட அவரை தடுத்து நிறுத்தினார்.

அவர் குடிபோதையிலோ அல்லது போதை பொருளை பயன்படுத்தி இருந்ததுபோன்றோ இருந்தது. தெருவில் போகும் பைத்தியம் பிடித்தவர் கூட இப்படி நடந்து கொள்ளமாட்டார் என கூறினார்.

SCROLL FOR NEXT