திருவனந்தபுரம்,
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அரசியல் அணுகுமுறை இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவதில்லை என்றும், அது பல நேரங்களில் பா.ஜ.க.வுக்கு சாதகமாக அமைகிறது என்றும் கேரள பினராயி விஜயன், விமர்சித்துள்ளார். இந்தியா கூட்டணி கூட்டத்தில், கேரளாவில் அரசியல் போட்டி இருப்பதால் பினராயி விஜயனை கட்டிப்பிடிக்க மாட்டேன் என்று ராகுல் காந்தி கூறியதாக வெளியான தகவல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், யார் யாரை கட்டிப்பிடிக்கிறார்கள் என்பது குறித்து தனக்கு கவலை இல்லை என்றார்.
இது குறித்து கேரள முன்னாள் முதல் மந்திரி பினராயி விஜயன் கூறியதாவது: ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை கட்டிப்பிடித்த புகைப்படத்தை நாம் அனைவரும் பார்த்தோம். அவர் மோடியை கட்டிப்பிடித்ததற்கே எனக்கு எதிர்ப்பு இல்லை. ஆனால், அவர் கூறிய கருத்துகள் ஒரு குறிப்பிட்ட அரசியல் செய்தியை வெளிப்படுத்துகின்றன. அது ராகுல் காந்தியின் அணுகுமுறையையும், இந்தியா கூட்டணியை அவர் எவ்வாறு பார்க்கிறார் என்பதையும் பிரதிபலிக்கிறது, இந்த விவகாரம் விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. இருந்தாலும், தற்போது அதைப் பற்றி நீண்ட விளக்கம் அளிக்க விரும்பவில்லை . இந்தியா கூட்டணி இன்று ஒரு குறிப்பிட்ட கட்டத்தை எட்டியுள்ளது. நாங்கள் மட்டுமல்ல, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் அல்லாத கட்சித் தலைவர்களும் கூட்டத்தின் போது எதிர்ப்புகளை முன்வைத்து, காங்கிரஸின் நிலைப்பாட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.
தற்போது தி.மு.க. எந்த நிலைப்பாட்டில் உள்ளது என்பதையும் மக்கள் பார்க்க முடிகிறது. இன்றைய சூழ்நிலைக்கு காங்கிரஸின் அணுகுமுறையும், குறிப்பாக ராகுல் காந்தியின் அணுகுமுறையும் காரணமாக அமைந்துள்ளது. இந்த அணுகுமுறை இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவதில்லை என்பதே உண்மை. நான் ஏற்கனவே கூறியதுபோல், இது பல நேரங்களில் பா.ஜ.க.வுக்கு உதவியாகவே அமைகிறது. இத்தகைய செயல்கள் மூலம் ராகுல் காந்தி, பா.ஜ.க.வின் நலன்களுக்கு துணைபுரியும் சூழ்நிலையை உருவாக்கி வருகிறார்” என்றார்.