தேசிய செய்திகள்

ராகுல் காந்தியின் பாதுகாப்பு வாகனங்கள் ஆம்புலன்ஸ் மீது மோதல்; பலர் காயம்

விபத்தில் சிக்கிய ஐந்து வாகனங்களும், பாதுகாப்பு வாகனங்களுக்கான வரிசையின் பின்பகுதியில் இருந்தவை என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

புதுடெல்லி

ராகுல் காந்தியின் பாதுகாப்பு வாகனங்கள் ஆம்புலன்ஸ் மீது மோதியதில் பலர் காயம் அடைந்தனர்.

காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி. ராகுல் காந்தி, உத்தர பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள விமான நிலையத்திற்கு இன்று காலை வந்து சேர்ந்துள்ளார். இதன்பின்னர் அவர், பாதுகாப்பு வாகனங்கள் சூழ 135 கி.மீ. தொலைவில் உள்ள சுல்தான்பூருக்கு புறப்பட்டு சென்றார்.

மோதல்

அப்போது, லக்னோவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள ஹலியாபூரில் சென்று கொண்டிருந்தபோது, பூர்வாஞ்சல் விரைவுச்சாலையில், அவருடைய பாதுகாப்புக்காக சென்ற வாகனங்களில், ஐந்து வாகனங்கள் ஆம்புலன்ஸ் ஒன்றுடன் மோதியது. இதில் பலர் காயமடைந்தனர்.

இந்த விபத்தில் சிக்கிய ஐந்து வாகனங்களும், பாதுகாப்பு வாகனங்களுக்கான வரிசையின் பின்பகுதியில் இருந்தவை என்று காவல் துறையினர் தெரிவித்தனர். இதனால், ராகுல் காந்திக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அவர் பாதுகாப்பாக உள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது.

அவதூறு வழக்கு

பா.ஜ.க. தலைவராக மத்திய மந்திரி அமித்ஷா இருந்தபோது, அவருக்கு எதிரான அவதூறு பேச்சுக்காக ராகுல் காந்திக்கு எதிராக எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி. கோர்ட்டில் வழக்கு நடைபெறுகிறது.

இதில் ஆஜராவதற்காக அவர் சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது. இதில் சிக்கி காயமடைந்தவர்களில் கட்சியின் தொண்டர்களும், பாதுகாப்பு பணியாளர்களும் அடங்குவர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

SCROLL FOR NEXT