புதுடெல்லி,
தமிழக முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் நேற்று பதவியேற்றுக் கொண்டார். இந்த விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த நிலையில், அந்த பதிவுகள் முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கிரிஷ் சோடங்கர் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணியைக் கண்டு மோடி அவ்வளவு பயப்படுகிறாரா, அதனால்தான் பதவியேற்பு வீடியோக்கள் கூட தடுக்கப்படுகின்றனவா? பதவியேற்பு விழாவில் தளபதி விஜய்யுடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இடம்பெற்றிருந்த ரீல் மற்றும் புகைப்படப் பதிவை இன்ஸ்டாகிராம் முடக்கியது. மேலும் அந்த பொது ஜனநாயக விழா குறித்த எனது பதிவும் நீக்கப்பட்டது.
அந்த வீடியோ ஒரு மணி நேரத்திற்குள் 1.2 கோடி பார்வைகளைக் கடந்திருந்தது. அந்தப் புகைப்படப் பதிவு ஏற்கனவே கிட்டத்தட்ட 4.6 கோடி மக்களை சென்றடைந்திருந்தது. ஆனால் அதன் பின்னர் ‘சட்டப்பூர்வ காரணங்கள்’ என்ற பெயரில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஒரு அரசியலமைப்பு பதவியேற்பு விழாவின் காட்சிகளில் அப்படி என்ன ஆபத்து இருக்கிறது? இது, டிஜிட்டல் தளத்தில் எதிர்க்கட்சிகளின் குரல்கள் மீது செய்யப்படும் பாரபட்சமான தணிக்கை மற்றும் ஒடுக்குமுறை குறித்த கடுமையான கவலைகளை எழுப்புகிறது.”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.