தேசிய செய்திகள்

வாக்காளர் பட்டியல் திருத்தம் விவகாரம்: எதிர்க்கட்சிகள் எழுப்பி வந்த சந்தேகங்கள் நிரூபணமாகியுள்ளன - சசிதரூர்

ஞானேஷ் குமாரின் கீழ் நடந்த நிர்வாக தோல்விகளின் வீரியத்தை மக்கள் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என சதிதரூர் கூறியுள்ளார்.

திருவனந்தபுரம்,

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட முந்தைய மாற்றங்கள் மிக மோசமான தவறுகள் என்றும், தற்போது அந்த முடிவுகளை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றதன் மூலம் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வந்த சந்தேகங்கள் நிரூபணமாகியுள்ளன என் றும் காங்கிரஸ் நாடாளு மன்ற உறுப்பினர் சசிதரூர் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கும் படிவம் 6 இல் இருந்து சிறப்பு வாக்காளர் பட்டியல்திருத்த அறிவிப்பை நீக்கும் தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய முடிவு குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.

உரிய அதிகாரமின்றி தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக சில மாற்றங்களை செய்ததாகவும்,

எதிர்க்கட்சிகள் மற்றும் மற்ற 2 தேர்தல் ஆணையர்களின் ஆட்சேபனைகளை அது புறக்கணித்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் கீழ் நடந்த நிர்வாக தோல்விகளின் வீரியத்தை மக்கள் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவதற்கு பயன்படுத்தப்படும் படிவம் 7 விண்ணப்பங்களைக் கையாண்ட விதம் குறித்தும் அவர் கடுமையாக கேள்வி எழுப்பினார். மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் ஆயிரக்கணக்கான பெயர்களைக் கொண்ட படிவம் 7 விண்ணப்பங்களை மொத்தமாக சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் அனுமதித்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் பொது மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாக அவர் வேதனை தெரிவித்தார். இந்த பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் நீண்ட காலமாக எழுப்பி வந்தபோதிலும், அதற்கு உரிய கவனம் செலுத்தப்பட வில்லை என்று அவர் கூறினார்.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ராஜினாமாவை கோருவதோடு மட்டும் நின்று விடவில்லை என்று கூறிய சசி தரூர், திருத்தப் பணிகளின் போது எடுக்கப்பட்ட தவறான முடிவுகளை திரும்பப் பெற வேண்டும் என்றும், தவறாக நீக்கப்பட்ட மக்களின் வாக்குரிமையை உடனடியாக மீட்டளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 1.13 கோடி வாக்குகள் நீக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை எதிர்க் கட்சிகள் எதிர்ப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்றார்.

சுப்ரிம் கோர்ட்டில் தற்போது நடைபெறும் விசாரணைகள், எதிர்க் கட்சிகளின் நிலைப்பாடும் ஆட்சேபனைகளும் முற்றிலும் நியாயமானவை என்பதை நிரூபித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT