ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில், இந்தியா–பாகிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள அனுப்கர்–சூரத்கர் ரயில் பாதையில் பயங்கர வெடிப்பு ஏற்பட்டது. நேற்று முன் தினம் இரவு 9.45 மணியளவில் 50 ஜிபி கிராமம் அருகே இந்த வெடிப்பு நிகழ்ந்தது. இதற்கு சுமார் 45 நிமிடங்களுக்கு முன்புதான் அனுப்கரில் இருந்து சூரத்கர் நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் அந்தப் பாதையைக் கடந்து சென்றது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
வெடிப்பின் தாக்கத்தில் தண்டவாளத்தின் அடியில் இருந்த இரண்டு சிமெண்ட் ஸ்லீப்பர்கள் உடைந்தன. தண்டவாளமும் சேதமடைந்ததுடன், சுமார் 2 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டது. வெடிச்சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் ரயில்வே அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், ரயில்வே அதிகாரிகள், உளவுத்துறை, குற்றப்பிரிவு போலீசார், தீவிரவாத தடுப்புப் படையினர், தடயவியல் நிபுணர்கள் மற்றும் வெடிகுண்டு செயலிழப்புப் படையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.