புதுடெல்லி
ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டோருக்கு ரெயில் பயண சலுகைகள் வழங்குவது பற்றி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதிலளித்து உள்ளது.
ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டோருக்கு ரெயிலில் ஏ.சி. பெட்டியில் பயணிக்க சலுகைகள் வழங்குவது தொடர்பாக பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. தீக்காயங்கள், தொடர் அரிப்பு மற்றும் அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டோர் ரெயிலின் ஏ.சி. பெட்டிகளிலேயே அடிக்கடி பயணிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
எனினும், அதிக டிக்கெட் விலையால் அவர்களால் அடிக்கடி ஏ.சி. பெட்டியில் பயணிப்பது இயலாதது. தற்போதுள்ள நடைமுறைப்படி அவர்களுக்கு ரெயில் கட்டணத்தில் சலுகை எதுவும் இல்லாமல் உள்ளது என மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதுபற்றி கடந்த ஜூலை 16-ந்தேதி மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட்டு விளக்கம் கேட்டிருந்தது. ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயண சலுகைகளை வழங்குவது பற்றி பரிசீலனை செய்யும்படி அரசிடம் அப்போது கேட்டு கொண்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூரிய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ரெயில்வே அமைச்சகம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அர்ச்சனா பதக் தவே, அவர்களை நோயாளி பிரிவில் வைத்து, சில சலுகைகளை வழங்கலாம்.
இல்லையெனில் மற்ற பிரிவினரும் கூட, தங்களுக்கும் இதுபோன்ற சலுகைகளை தர வேண்டும் என கோருவார்கள் என்று கூறினார். அந்த வகையில், இதனை கொள்கை அளவில் ஏற்று கொண்டு, விதிமுறை மற்றும் கொள்கைகளை உருவாக்க மத்திய அரசு ஒப்பு கொண்டுள்ளது என கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள் அமர்வு அதற்கு உரிய காலஅவகாசம் வைத்து கொள்ளுங்கள் என கூறி, இதுதொடர்பாக 6 வாரங்களில் வரைவு கொள்கை ஒன்றை தாக்கல் செய்யும்படி கோர்ட்டு உத்தரவிட்டது.