ஜெய்ப்பூர்
ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தில் துங்காரி கே பந்தா கிராமத்தில் வசித்து வருபவர் சோஹன்லால். திருமணம் நடந்து 6 ஆண்டுகள் ஆகின்றன. எனினும், தம்பதிக்கிடையே ஏற்பட்ட தகராறால், மனைவி கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.
இதனால் கணவனும், மனைவியும் ஓராண்டாக தனித்தனியாக வசித்து வருகின்றனர். மனைவியின் குடும்பத்தினருடன் சோஹன்லாலுக்கு நீண்டகால மோதல் போக்கு இருந்து வந்துள்ளது. அவ்வப்போது சண்டையிட்டு வந்துள்ளார்.
அவர்களுடைய உறவினர்களோ, இந்த தம்பதியை சேர்த்து வைக்க பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அதில் பலனில்லை. இதுபற்றி போலீசார் கூறும்போது, இரு குடும்பத்தினர் இடையே பல நாட்களாக கடுமையான சண்டை மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை சோஹன்லாலின் மாமியார் கெலி தேவி, மருமகன் மீது புகாரளிப்பதற்காக காவல் நிலையத்திற்கு செல்ல புறப்பட்டு உள்ளார். இதனையறிந்து குறுக்கே வந்த சோஹன்லால் மனைவியின் தாயார் என்றும் பாராமல் ஆத்திரத்தில், மாமியார் தேவியின் மூக்கை வெட்டி, அதன் ஒரு பகுதியை கையோடு எடுத்து சென்றுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
அந்த பெண்ணை உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, குஜராத்தின் மெஹ்சானா நகரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.