குரங்கு 
தேசிய செய்திகள்

ராஜஸ்தான்: மனிதர்களைப் போலவே குரங்கிற்கும் மேளதாளங்கள் முழங்க இறுதி ஊர்வலம்!

உயிரிழந்த விலங்கிற்குப் பொதுமக்கள் ஒன்றுகூடி இவ்வளவு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்த நிகழ்வு அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்கிற்கு, மனிதர்களுக்கு செய்வது போலவே மேளதாளங்கள் முழங்க ஊர்வலம் நடத்தி பொதுமக்கள் இறுதிச்சடங்கு செய்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரின் விஜய் சௌக் பகுதியில் உள்ள ஜீவன்தாஸ்ஜி கிணறு அருகே நேற்று (திங்கட்கிழமை) குரங்கு ஒன்று உலாவிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அந்த குரங்கு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

பாரம்பரிய முறைப்படி சடங்குகள்

இதனைக் கண்ட அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் மிகுந்த சோகமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, அந்த குரங்கிற்கு இந்து மதச் சடங்குகளின்படி இறுதி மரியாதை செலுத்த முடிவு செய்தனர். இதன்படி, குரங்கின் உடலுக்குப் புனித நீராட்டி, மலர் மாலைகள் அணிவித்து சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.

மேளதாளம் முழங்க இறுதி ஊர்வலம்

இதனைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட பாடை ஒன்றில் குரங்கின் உடல் வைக்கப்பட்டு, மேளதாளங்கள் முழங்க இறுதி ஊர்வலம் நடைபெற்றது. விஜய் சௌக் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் ஏராளமான பொதுமக்கள் இந்த ஊர்வலத்தில் கண்ணீருடன் பங்கேற்றனர். பின்னர், மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முறைப்படி தகனம் செய்யப்பட்டது.

உயிரிழந்த விலங்கிற்குப் பொதுமக்கள் ஒன்றுகூடி இவ்வளவு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்த நிகழ்வு அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT