தேசிய செய்திகள்

ராஜஸ்தான் சாலை விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி - பிரதமர் மோடி அறிவிப்பு

ராஜஸ்தானில் லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழாங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

நகாவுர்,

ராஜஸ்தானின் நகாவுர் பகுதியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று லாரி மீது இன்று காலை திடீரென மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இதுதவிர 7 பேர் காயமடைந்து உள்ளனர்.

காயமடைந்தவர்கள் பிகானிர் பகுதியில் நோக்கா என்ற இடத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுகு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்துபற்றி ஸ்ரீபாலாஜி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதை போல இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கான முழுச் செலவையும் மாநில அரசே ஏற்கும் என அவர் தெரிவித்துள்ளார்.