தேசிய செய்திகள்

2026 நிதி மசோதாவிற்கு மாநிலங்களவை ஒப்புதல்

அடுத்த நிதியாண்டிற்கான வரவு செலவு திட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

புதுடெல்லி,

2026-27ம் நிதியாண்டுக்கான நிதி மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது விவாதம் நடத்தப்பட்டது. இதில் அரசின் 32 திருத்தங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. பின்னர் அந்த திருத்தங்களுடன் நிதி மசோதா மக்களவையில் கடந்த 25-ந்தேதி நிறைவேறியது.

தொடர்ந்து மத்திய நிதி மசோதா மாநிலங்களவை பரிசீலனைக்காக அனுப்பப்பட்டது. இதன்படி மாநிலங்களவையில் இன்று நிதி மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து 2026 நிதி மசோதாவிற்கு மாநிலங்களவை ஒப்புதல் அளித்தது. இதன் மூலம், ஏப்ரல் 1-ந்தேதி முதல் தொடங்கும் அடுத்த நிதியாண்டிற்கான வரவு செலவு் திட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

மத்திய நிதி மசோதாவில், 2026-27ம் நிதியாண்டிற்கான மொத்த செலவினம் ரூ.53.47 லட்சம் கோடியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது, வரும் மார்ச் 31-ந்தேதியோடு முடிவடையும் நடப்பு நிதியாண்டை விட 7.7 சதவீதம் அதிகமாகும்.

அதே போல், மத்திய நிதி மசோதாவில், அடுத்த நிதியாண்டிற்கான மொத்த மூலதனச் செலவு ரூ.12.2 லட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அடுத்த நிதியாண்டில் மொத்த வரி வருவாய் வசூல் ரூ.44.04 லட்சம் கோடியாகவும், கடனாக வாங்கும் தொகை ரூ.17.2 லட்சம் கோடியாக இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

2027-ம் நிதியாண்டிற்கான நிதிப் பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.3 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டில் இருந்த 4.4 சதவீதத்தை விட குறைவாகும்.