புதுடெல்லி,
அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சி.வி. சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், ஜூன் 18ம் தேதியன்று மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் அதிக உறுப்பினர்களுடன் தவெக தனி பெரும் கட்சியாக உள்ளது. எனவே தமிழ்நாட்டில் இருந்து தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்.
அதுவும் வேறு எந்தக் கட்சியிலிருந்தாவது வேட்புமனு தாக்கல் செய்தால் மட்டுமே தேர்தல் நடக்கும். அதுவும் இல்லை என்றால், தவெக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார். இதனைத்தொடர்ந்து மாநிலங்களவை இடைத்தேர்தலில் தவெக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே, அப்பதவி காங்கிரசுக்கு வழங்கப்படுவதாக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பிரவீண் சக்ரவர்த்தி அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிட உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை அறிவித்துள்ளது.
இதன்படி பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த விவரத்தை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று வெளியிட்டார்.
அதில் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுகிறார். கர்நாடகாவில் இருந்து மல்லிகார்ஜுன கார்கே, பவன் கெரா மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மத்திய பிரதேசத்தில் இருந்து மீனாட்சி நடராஜனும், ராஜஸ்தானில் இருந்து நீரஜ் டான்கியும், ஜார்கண்டில் இருந்து பிரன்வ் ஜாவும் போட்டியிடுகின்றனர்.