புதுடெல்லி,
நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், ராஜ்யசபா நியமன எம்.பி. பதவியைப் பெற முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லதா ரஜினிகாந்த் கல்வி நிறுவனம் மற்றும் தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்தப் பணிகளின் அடிப்படையில் ராஜ்யசபா நியமன எம்.பி. பதவியை பெற அவர் விரும்புவதாக கூறப்படுகிறது.
இதற்காக டெல்லியில் சில முக்கிய தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோரை அவர் சந்தித்துள்ளதாகவும், அடுத்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களை ஜனாதிபதி ராஜ்யசபாவுக்கு நியமிக்கலாம். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் இதற்கு முன்பு நியமன எம்.பி.க்களாக இருந்துள்ளனர். தற்போது இசையமைப்பாளர் இளையராஜாவும் நியமன எம்.பி.யாக உள்ளார்.