தேசிய செய்திகள்

மாநிலங்களவை எம்.பி. தேர்தல்: பா.ஜ.க. கூட்டணிக்கு எம்.பி.க்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது..!

மாநிலங்களவையில் காலியாகும் 37 எம்.பி. பதவி இடங்களுக்கு மார்ச் 16-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தமிழகம் உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 37 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதன்படி வேட்புமனு தாக்கல் வரும் 26-ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 5-ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்களை திரும்ப பெற மார்ச் 9-ஆம் தேதி கடைசி நாளாகும். மார்ச் 16-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, மேற்கு வங்காளம், ஒடிசா, பீகார், அரியானா, அசாம், தெலுங்கானா, இமாசல பிரதேசம், சத்தீஷ்கார் மற்றும் மராட்டி யம் ஆகிய 10 மாநிலங்களில் 37 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் மாதம் காலியாக போகிறது.

தமிழ்நாட்டில் தி.மு.க. எம்.பி.க்கள் திருச்சி சிவா, டாக்டர் கனிமொழி சோமு, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராசு, அ.தி.மு.க. எம்.பி. தம் பிதுரை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகிறது. தற்போதுள்ள எம்.எல்.ஏக்களின் அடிப்படையில் தி.மு.க. 4 எம்.பிக்களையும், அ.தி.மு.க. 2 எம்.பிக்களையும் தேர்வு செய்ய முடியும்.

திமுக - 4, அதிமுக - 2

அதாவது சட்டசபையில் தற்போதுள்ள 234 எம்.எல்.ஏக்களின் அடிப்படை யில் கணக்கிட்டால் ஒரு வேட்பாளர் வெற்றி பெற சுமார் 34 முதல் 35 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. தற்போதைய நிலையில் சட்டசபையில் தி.மு.க. கூட்டணிக்கு 158 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். எனவே அவர்களால் மிக எளிதாக 4 இடங்களை வெல்ல முடியும். அ.தி.மு.க கூட்டணியின் பலம், அதாவது பா.ஜனதா, பா.ம.க. சேர்த்தால் 68-க்கு மேல் வருகிறது. எனவே அவர்களால் எளிதாக 2 இடங்களை வெல்ல முடியும்.

தி.மு.க.வின் 4 வேட்பாளர்கள் யார் என்பது குறித்து தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தீவிரமாக பரிசீலித்து வருகிறார். ஆனாலும் கடைசி நேரத்தில் ஏதாவது மாற்றம் வரலாம் என்ற எதிர்பார்ப்பும் கூட்டணி கட்சிகளுக்கு இருக்கிறது.

பா.ம.க., தே.மு.திக., த.மா.கா.

அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.வுடன் கூட்டணி ஏற்பட்டதும் அந்த கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும், சட்டசபை தேர்தலில் 17 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிகிறது. மீதமுள்ள ஒரு இடத்தை அ.தி.மு.க. வைத்துக்கொள்ளுமா? அல்லது அந்த கூட்டணியில் இணையும் ஏதாவது ஒரு கட்சிக்கு வழங்கப்படுமா என்பது குறித்து அ.தி.மு.க. தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த தே.மு.தி.க.வுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் கடந்த முறை நடந்த மாநிலங்களவை எம்.பி.க்கள் தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு சீட் வழங்கப்படவில்லை. இதனிடையே கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி அ.தி.மு.க. வெளியிட்ட அறிவிப்பில், 2026-ல் ஒரு எம்.பி. சீட் தே.மு.தி.க.விற்கு வழங்கப்படும் என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனும், எம்.பி. பதவி தர வேண்டும் என்று அ.தி.மு.க.விடம் கோரி வருகிறார். மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் அ.தி.மு.க.நிலைப்பாடு என்ன என்பது விரைவில் தெரியவரும்.

பா.ஜ.க. கூட்டணிக்கு அதிக எம்.பி.க்கள்

மாநிலங்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 10 மாநிலங்களில் 6 மாநிலங்களில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளன. அந்த வகையில் மராட்டியம், ஒடிசா, சத்தீஷ்கார், அசாம், பீகார் ஆகிய மாநிலங்களில் இருந்து அதிக எம்.பி.க்கள் பா.ஜ.க. கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநிலங்களவை தேர்தலில் போட்டி இருந்தால் வாக்குப்பதிவு மார்ச் 16 ஆம் தேதி நடைபெறும். அன்று மாலையே வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில், மாநிலங்களவை சீட் விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுக்கலாம் என்பதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.