புதுடெல்லி ,
அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கப்பட்ட காணிக்கைகள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் புகார்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளது. இந்த விவகாரத்தை இன்னும் சில நாட்கள் கழித்து விசாரித்தாலும் "வானம் இடிந்து விழுந்துவிடாது" என்று கோர்ட் கருத்து தெரிவித்தது.
இந்த மனுக்களின் அவசரத் தன்மை குறித்து கோர்ட் பதிவாளர் மற்றும் உரிய அதிகாரி திருப்தி அடைந்த பிறகு, உரிய நேரத்தில் விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என்று நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஷீல் நாகு ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்தது.மனுதாரர்களில் ஒருவரான அஜய் குமார் ராய் நேரில் ஆஜராகி, வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்றும், முறைகேடு தொடர்பான தற்போதைய விசாரணையில் தமக்கு திருப்தி இல்லை என்றும் வாதிட்டார்.
இந்த வழக்கில் உத்தரப் பிரதேச அரசின் சார்பில் மூத்த கூடுதல் தலைமை வழக்கறிஞரும், மூத்த வழக்கறிஞருமான சரண் தேவ் சிங் தாக்கூர் ஆஜராகி வாதிட்டார்.