லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தில் உலகப்புகழ்பெற்ற இந்து மதக்கடவுள் ராமர் கோவில் உள்ளது. அயோத்தி ராமர் கோவிலை ராம ஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது.
இதனிடையே, அயோத்தி ராமர் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கடவுள் ராமரை தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், கோவிலுக்கு நன்கொடையாகவும், காணிக்கையாகவும் தினமும் லட்சக்கணக்கான ரூபாய், தங்கம், வெள்ளி நகைகளை பக்தர்கள் வழங்குகின்றன. இந்த நன்கொடை, காணிக்கை மற்றும் வரவு, செலவை ராம ஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது.
இதனிடையே, ராமர் கோவிலுக்கு பக்தர்கள் வழங்கிய காணிக்கை பணத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. கோவிலில் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டவர்கள் காணிக்கை, நன்கொடை பணத்தை திருடியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் 3 கோடி ரூபாய் வரை காணிக்கை பணத்தில் திருடப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த திருட்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பூதாகாரமான நிலையில் இந்த முறைகேடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், காணிக்கை முறைகேடு புகார் தீவிரமடைந்துள்ள நிலையில் ராமர் கோவிலை நிர்வகிக்கும் ராம ஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அயோத்தி ராமர் கோவிலுக்கு தலைமை செயல் அதிகாரியை (சிஇஓ) நியமனம் செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த பணிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பிக்க 18ம் தேதி கடைசி நாள் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. புதிதாக நியமிக்கப்பட உள்ள அயோத்தி ராமர் கோவில் தலைமை செயல் அதிகாரியின் முதன்மை பணியாக, அறக்கட்டளை மீதான பக்தர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் பணி உள்ளது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.