புதுடெல்லி
டெல்லியில் குழந்தையின்மை பிரச்சினைக்காக மருத்துவமனைக்கு சென்ற 24 வயது இளைஞர் ஒருவருக்கு, அவரது வயிற்று பகுதிக்குள் நன்கு வளர்ந்த கருப்பை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி ராஜோரி கார்டன் பகுதியில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனைக்கு 24 வயது வாலிபர் ஒருவர் வந்தார். தனக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை என்றும், அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.அவருக்கு ஆண்மைக்குரிய அனைத்து உடல் அமைப்புகளும் சாதாரணமாகவே இருந்தன. வெளிப்படையாக பார்த்தால் எந்தவித அறிகுறியும் தெரியவில்லை.
இதையடுத்து, அந்த வாலிபருக்கு மருத்துவர்கள் தீவிர மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். அப்போது அவரது விந்தணுக்களின் எண்ணிக்கை பூஜ்யமாக (விந்தணுக்கள் இல்லாத நிலை) இருந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த மருத்துவக் குழுவினர், அவரது உடலை ஸ்கேன் செய்து பார்த்தனர்.
அப்போது மருத்துவர்களுக்கே தூக்கி வாரிப்போடும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது அந்த வாலிபரின் வயிற்று பகுதிக்குள் பெண்களுக்கு இருப்பதை போன்ற நன்கு வளர்ச்சியடைந்த கருப்பை மற்றும் பலோபியன் குழாய்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ஆண்களுக்கு விதைப்பையில் இருக்க வேண்டிய இரண்டு விரைகளும், விதைப்பையில் இல்லாமல் வயிற்று பகுதியிலேயே தங்கியிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மருத்துவக் குழுவினர் கூறும்போது:"இது உலகிலேயே மிக அரிய வகை மருத்துவக் குறைபாடாகும். இதற்கு மருத்துவ உலகில் 'பெர்சிஸ்டண்ட் முல்லேரியன் டக்ட் சிண்ட்ரோம்' என்று பெயர். வயிற்றுக்குள் இருக்கும் விரைகளால் எதிர்காலத்தில் புற்றுநோய் ஏற்படும் பயங்கர ஆபத்து உள்ளது. எனவே, அவற்றை உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது மிகவும் அவசியமாகும். வெளிப்புற தோற்றம் ஆணாக இருந்தாலும், உடலின் உட்பகுதியில் பெண்ணின் உறுப்பு வளர்ந்து விடுகிறது. பாதிக்கப்பட்ட வாலிபரின் விரைகள் விதைப்பையில் இல்லாமல் வயிற்றுக்குள்ளேயே தங்கியுள்ளன.
இந்த சூழலில், அந்த இளைஞரின் வயிற்றுக்குள் இருந்த கருப்பை மற்றும் 2 விரைகளையும் அகற்றமருத் துவர்கள் முடிவு செய்தனர். இதற்காக குறைந்த அளவு காயம் ஏற்படும் லேப்ராஸ் கோபிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.இவ்வாறு வெறும் ஆச்சரியம் மட்டுமல்ல... விழிப்புணர்வு தேவை!ஆண் உடம்பிற்குள் கருப்பை இருப்பதை வெறும் ஆச்சரியமான மருத்துவ கண்டுபிடிப்பாக மட்டும் பார்த்து கடந்துவிடக் கூடாது.
இதுபோன்ற நிலை யாருக்கேனும் ஏற்பட்டால், அவர்கள் உடனடியாக ஆண்மை மற்றும் இனப்பெருக்க மருத்துவம், இனப்பெருக்க ஹார்மோன் மருத்துவம் ஆகிய பரிசோதனைகளை செய்ய வேண்டும். தேவைப்பட்டால் மரபியல் நிபுணர்கள் மூலம் விரிவான மரபணு பரிசோதனை மேற்கொண்டு உரிய சிகிச்சை பெற வேண்டும். என்று கூறினர்.
ஆண் உடம்பிற்குள் கருப்பை இருந்த இந்த அரிய சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.