தேசிய செய்திகள்

கேரளாவில் எலிக்காய்ச்சல் பரவல்: 2 பேர் பலி; 9 பேருக்கு பாதிப்பு உறுதி

கேரளாவில் 12 பேருக்கு டெங்கு பாதிப்பும், 8 பேருக்கு மலேரியா பாதிப்பும், 6 பேருக்கு ஷிகெல்லா பாதிப்பும் ஏற்பட்டு உள்ளது.

கொச்சி

கேரளாவில் லெப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சல் பாதிப்பால் 2 பேர் பலியாகி உள்ளனர்.

எலிக்காய்ச்சல்

கேரளாவில் லெப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சல் பாதிப்பு பரவி வருகிறது. இதன் தாக்கத்திற்கு இதுவரை 2 பேர் பலியாகி உள்ளனர். 9 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது என கேரள சுகாதார துறை இன்று உறுதிப்படுத்தி உள்ளது.

இதுபற்றி உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட செய்தியில், லெப்டோஸ்பைரோசிஸ் என்பது பாக்டீரியாவால் ஏற்படும் பாதிப்பாகும். இதனால் மனிதர்களும், விலங்குகளும் பாதிக்கப்படுவார்கள். தொற்று ஏற்பட்ட விலங்கு சிறுநீரில் இருந்து நேரடி தொடர்பால் அல்லது சிறுநீர் பாதித்த சுற்றுச்சூழலால் இந்த தொற்று மனிதர்களுக்கு ஏற்படுகிறது என தெரிவித்து உள்ளது.

டெங்கு பாதிப்பு

இதுதவிர, புதிதாக 12 பேருக்கு டெங்கு பாதிப்பும், 8 பேருக்கு மலேரியா பாதிப்பும், 6 பேருக்கு ஷிகெல்லா பாதிப்பும் ஏற்பட்டு உள்ளது. கேரளா முழுவதும் காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 11,776 பேர் மருத்துவமனை மற்றும் சுகாதார மையங்களில் காய்ச்சல் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.