மும்பை,
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் ரெப்போரேட் என்று அழைக்கப்படுகிறது. 2 மாதங்களுக்கு ஒருதடவை ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு கூடி, இந்த வட்டி விகிதத்தை மாற்றி அமைப்பது பற்றி ஆலோசனை நடத்துகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில், சில்லறை பணவீக்க விகிதம் 2.74 சதவீதத்தில் இருந்து 3.21 சதவீதமாக உயர்ந்தது. பணவீக்கத்தை 4 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ரிசர்வ் வங்கியை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
வங்கிக்கடன் வட்டி விகிதம், பணவீக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், வட்டிவிகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்து வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம்வரை வட்டிவிகிதம் மொத்தம் 1.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்பலனாக வங்கிக்கடன் வட்டி விகிதம் 5.25 சதவீதமாக உள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில், இது மாற்றப்படாமல் நீடித்தது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை குழுவின் 3 நாட்கள் கூட்டம் நேற்று தொடங்கியது. ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் 6 பேர் கொண்ட நிதிக்கொள்கை குழு, வங்கிக்கடன் வட்டி விகிதம் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. அதன் முடிவில், நாளை (புதன்கிழமை) தனது முடிவை அறிவிக்கிறது.
மேற்கு ஆசிய போர் தொடங்கிய பிறகு நடக்கும் முதலாவது நிதிக்கொள்கை குழு கூட்டம் இதுவாகும். மேற்கு ஆசிய போரால் பணவீக்கம் மேலும் உயரும் என்ற அச்சம் உள்ளதால், வங்கிக்கடன் வட்டிவிகிதத்தில் (5.25 சதவீதம்) மாற்றம் செய்யப்படாது என்று நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதுதொடர்பான முடிவை ரிசர்வ் வங்கி நாளை அறிவிக்கிறது.
முன்னதாக கடந்த ஆண்டு ஒரு சதவீதத்திற்கும் மேல் வீட்டுக் கடன் மற்றும் வாகனக் கடன், தங்க நகை கடன்களுக்கான வட்டிகள் குறைந்தன. தற்போது நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.